2 நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே கூட்டணி: மநீம அறிவிப்பு
2 நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே கூட்டணி: மநீம அறிவிப்பு
ADDED : ஜன 23, 2024 04:44 PM

சென்னை: லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்க 2 நிபந்தனைகளை விதித்து மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் துவங்கியது. அப்போது லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் மாற்றுத் திறனாளிகள் அணி உருவாக்குதல் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத் தலைவர் மவுரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தின் வளர்ச்சியிலும், தமிழக மக்களின் நலன்களிலும் எந்த சமரசமும் அனுமதிக்கப்படாது. எங்கள் கட்சி தலைவர் கமல்ஹாசனின் சிந்தனைகள், கொள்கைகளுடன் ஒத்துப்போகும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.
இந்த இரு நிபந்தனைகளுடனும் ஒத்து வராவிட்டால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயங்க மாட்டோம். இதற்காக நிர்வாக குழு அமைக்க செயற்குழு அனுமதி கொடுத்துள்ளது''என்றார்.

