அ.தி.மு.க., கூட்டணிக்கு வருமாறு திருமாவை அழைக்கவில்லை : பழனிசாமி
அ.தி.மு.க., கூட்டணிக்கு வருமாறு திருமாவை அழைக்கவில்லை : பழனிசாமி
ADDED : ஜூலை 24, 2025 01:39 PM
தஞ்சாவூர்: ''அ.தி.மு.க., கூட்டணிக்கு வந்தால், நிறைய 'சீட்' தருவதாக பழனிசாமி கூறியதாக, வி.சி., தலைவர் திருமாவளவன் சொல்லி வருவது முழுக்கப் பொய்,'' என, பிரசாரக் கூட்டத்தில் பழனிசாமி கூறினார்.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொள்ளும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில் மக்கள் மத்தியில் பேசியதாவது:
அடுத்தாண்டு சட்டசபைக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. ஆனால் முதல்வர், அமைச்சர்கள், தி.மு.க., நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் என எல்லோரும் பா.ஜ.,வை விமர்சிக்கின்றனர். ஏனென்றால, அ.தி.மு.க.,வை விமர்சிக்க எதுவும் இல்லை.
டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம். இனி எந்தக் காலத்திலும், எந்த தொழிற்சாலையும் டெல்டா பகுதியில் வராது.
கருணாநிதி நூற்றாண்டு விழா கண்காட்சியில், ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டது போன்ற ஒரு காட்சி இருந்தது. உண்மையிலேயே அவர் சிறைக்குச் செல்ல வேண்டியவர்தான். உதயநிதி எத்தனை போராட்டத்தில் கலந்து கொண்டார்? தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் தான் அதிகமாக கட்சிக்காக உழைத்தவர். ஆனால், அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவில்லை.
உதயநிதியின் மகன் இன்பநிதி வந்தாலும் ஏற்பேன் என்கிறார் அமைச்சர் நேரு. எவ்வளவு தரம் தாழ்ந்து போய் விட்டனர் என பாருங்கள். 1989ல், நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோதே, அமைச்சராக இருந்தவர் நேரு. அங்கு அவருக்கே இது தான் நிலைமை. உழைத்தவர்களுக்கு, தி.மு.க.,வில் பதவி கிடைக்காது.
'பழனிசாமி, எனக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாகச் சொல்லி உள்ளார்; அ.தி.மு.க., கூட்டணிக்கு வந்தால், நிறைய சீட் தருவதாக சொல்லி இருக்கிறார்' என்றெல்லாம் வி.சி., தலைவர் திருமாவளவன் சொல்லி வருகிறார். அப்படி யாரிடமும் நான் சொல்லவே இல்லை.
இன்றைக்குச் சொல்கிறேன். திருமாவளவன் கட்சியை கட்டாயம் தி.மு.க., விரைவில் விழுங்கும்.
தி.மு.க., ஆட்சி முடிவுறும் தருவாயில், 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் நிதி மேலாண்மை சரி செய்ய, நிபுணர் குழு அமைத்தனர். அவர்கள் அறிக்கைபடி, வருவாயை உயர்த்துவோம் என்றார் ஸ்டாலின். அப்படி எதுவுமே நடக்கவில்லை. இன்று வரை, வாயாலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.
தி.மு.க., மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது. அதனால் தான், வீடு வீடாகச் சென்று, உறுப்பினர் சேர்த்துக் கொண்டுள்ளனர். இதற்கு முன்பு எந்தக் கட்சியும் இப்படியெல்லாம் செய்ததில்லை. இன்றைய நிலையில், தி.மு.க., கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.