ADDED : ஏப் 09, 2025 01:48 AM
சென்னை:தி.மு.க., - எம்.எல்.ஏ., சரவணனின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், உணவு, கூட்டுறவு அமைச்சர்களின் பதிலுரையை புறக்கணித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் நேற்று, உணவு, கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய கலசப்பாக்கம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சரவணன், அ.தி.மு.க., ஆட்சியில், ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்பட்டதாகவும், அதனால், ஆடு, கோழிகளுக்கு பயன்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், முன்னாள் உணவு அமைச்சர் காமராஜ், முன்னாள் கூட்டுறவு அமைச்சர் செல்லுார் ராஜூ ஆகியோர், அதற்கு பதிலளிக்க வாய்ப்பு கேட்டனர்.
அதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்களின் பதிலுரை முடிந்த பின் தருவதாக சொன்னார். அதை ஏற்காத அ.தி.மு.க.,வினர் எழுந்து நின்று முழக்கமிட்டனர்.
அதைத் தொடர்ந்து, செல்லுார் ராஜூவுக்கு பேச அனுமதி அளிக்கப்பட்டது. அவர் பேச்சை துவங்கியதும், அதற்கு ஆளும் தரப்பில் இருந்து எதிர்ப்பு வரவே, தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் தலைமையில், அமைச்சர்களின் பதிலுரையை புறக்கணித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதைத்தொடர்ந்து பேசிய பொதுப்பணி துறை அமைச்சர் வேலு, ''அ.தி.மு.க.,வினருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படவில்லை. அமைச்சர்கள் பதிலளித்த பின் பேச நேரம் தருவதாக, பெருந்தன்மையோடு சபாநாயகர் கூறினார். அதன்பின்னும் வெளிநடப்பு செய்துஉள்ளனர்,'' என்றார்.

