'ஏ.ஐ., - டேட்டா சயின்ஸ்' ஐ.ஐ.டி.,யில் புதிய படிப்பு
'ஏ.ஐ., - டேட்டா சயின்ஸ்' ஐ.ஐ.டி.,யில் புதிய படிப்பு
ADDED : செப் 24, 2024 07:01 AM

சென்னை: மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு தொழில் நெறி அனுபவத்தை வழங்கும் வகையில், எட்டு வார காலத்தில், 'ஏ.ஐ., - டேட்டா சயின்ஸ்' என்ற புதிய படிப்பை இணைய வழியில் நடத்த, சென்னை ஐ.ஐ.டி., முன்வந்துள்ளது. இதில், சேர பள்ளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்டுள்ள அறிக்கை:
பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, தொழில் நெறி அனுபவத்தை வழங்கும் வகையில், பள்ளி இணைப்பு திட்டத்தை, சென்னை ஐ.ஐ.டி., செயல்படுத்துகிறது. இதில், 'எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் மற்றும் ஏ.ஐ., - டேட்டா சயின்ஸ்' என்ற புதிய படிப்புகளை, 'ஆன்லைன்' வழியாக நடத்தி சான்றிதழ்களை அளிக்க உள்ளது.
இதற்காக, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள், சிறந்த பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளனர். இதில், படிக்கும் மாணவர்களுக்கு, அதிக வாய்ப்புகளை தரும் புதிய படிப்புகள் குறித்த தெளிவும், முடிவெடுக்கும் பக்குவமும் கிடைக்கும்.
அடுத்த மாதம் 21ல் வகுப்புகள் துவங்க உள்ள நிலையில், கடந்த 16ம் தேதி இதற்கான முன்பதிவு துவங்கி உள்ளது. இதில், 500க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த, 11,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதில் சேர ஆர்வமுள்ள பள்ளிகள், 'https://school-connect.study.iitm.ac.in/' என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

