அ.தி.மு.க., பழனிசாமியின் நிலை இலவு காத்த கிளி! : கூட்டணிக்கு யாரும் வராததால் விரக்தி
அ.தி.மு.க., பழனிசாமியின் நிலை இலவு காத்த கிளி! : கூட்டணிக்கு யாரும் வராததால் விரக்தி
UPDATED : பிப் 06, 2024 04:11 PM
ADDED : பிப் 04, 2024 11:44 PM

லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு, எதிர்பார்த்தபடி முக்கிய கட்சிகள் எதுவும் முன்வராததால் விரக்தி அடைந்துள்ள அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, இலவு காத்த கிளி போன்ற நிலைக்கு மாறியுள்ளதாகவும், குட்டிக் கட்சிகளை சேர்த்து, 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2019ம் ஆண்டின் லோக்சபா தேர்தல், 2021ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த லோக்சபா தேர்தலிலும், அக்கூட்டணி தொடரும் என்ற எதிர்பார்ப்பு பா.ஜ.,விடம் இருந்தது.
ஆனால், 2026ம் ஆண்டின் சட்டசபை தேர்தலை மையப்படுத்தியும், சிறுபான்மையினர் ஓட்டுகளுக்காகவும், பா.ஜ.,வுடனான உறவை, சில மாதங்களுக்கு முன் அ.தி.மு.க., முறித்துக் கொண்டது.
அ.தி.மு.க., சார்பில் மெகா கூட்டணி அமைக்கவும், தொகுதி பங்கீடு பேச்சு நடத்தவும் குழுக்கள் அமைக்கப்பட்டன. அக்குழுவில் முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, சீனிவாசன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட சிலர் இடம் பெற்றுள்ளனர்.
முன்வரவில்லை
அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., - பா.ம.க., - த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி போன்றவை பேச்சு நடத்த வரும் என, ஆர்வமுடன் தொகுதி பங்கீடு பேச்சு குழுவினர் காத்திருக்கின்றனர்.
எஸ்.டி.பி.ஐ., புரட்சி பாரதத்தை தவிர, வேறு எந்த ஒரு கட்சியும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கவும், பேச்சு நடத்தவும் முன்வரவில்லை; மறைமுகமாக பேச்சு நடத்தக்கூட ஆர்வம் காட்டவில்லை.
சமீபத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., இணைந்து செயல்பட வேண்டும் என, இரு கட்சிகளுக்கும் துாதராக வந்து பேச்சு நடத்தி உள்ளார்.
பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்பதில் அ.தி.மு.க., உறுதியாக இருக்கிறது. அதேசமயம், பா.ஜ.,வை தவிர, மற்ற கட்சிகள் கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்த பழனிசாமிக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
எந்த ஒரு கட்சியும் கூட்டணிக்கு வராததால், விரக்தி அடைந்துள்ள பழனிசாமி, இலவு காத்த கிளி போல இருக்கிறார் என, அ.தி.மு.க.,வினர் வருத்தப்படுகின்றனர்.
சரியான கூட்டணி அமையாத பட்சத்தில், சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 40 இடங்களிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவும் பழனிசாமி திட்டமிட்டுஉள்ளார்.
இது குறித்து, அ.தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:
பா.ஜ.,வோடு கூட்டணி இருந்ததால், தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள், அ.தி.மு.க., பக்கம் வர தயக்கம் காட்டின.
சித்தாந்த ரீதியில் பா.ஜ.,வுக்கு எதிராகச் செயல்படுபவர்கள், அ.தி.மு.க.,வோடு கூட்டணி சேர விரும்பினாலும், செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
அதனால், பா.ஜ., கூட்டணியை விட்டு விலகினால், அக்கட்சிகளோடு முஸ்லிம் இயக்கங்களும் கூட்டணிக்கு வரும் என்றும், இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலர் பழனிசாமியிடம் அடித்துக் கூறினர்.
இதற்கிடையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஊழல் கட்சி என அ.தி.மு.க.,வை விமர்சிக்க துவங்கவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது என முடிவெடுத்தார் பழனிசாமி.
நடவடிக்கை பாயும்
கிறிஸ்துவர்கள் ஏற்பாடு செய்த கூட்டங்கள், முஸ்லிம் இயக்கமான எஸ்.டி. பி.ஐ., கட்சியின் மாநாடு என, சிறுபான்மையின மக்கள் நடத்தும் கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக செல்லத் துவங்கினார்.
ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல தி.மு.க., கூட்டணியில் எந்த சலசலப்பும் ஏற்படவில்லை.
பா.ஜ.,வை பகைத்துக் கொண்டு, அவசரப்பட்டு கூட்டணியில் இருந்து விலகி விட்டோமோ என, கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தற்போது பழனிசாமி காதுபடவே பேசத் துவங்கி உள்ளனர்.
மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைத்து விட்டால், ஊழல் வழக்குகள் தொடர்பான நடவடிக்கை பாயும் என்ற அச்சம் முன்னாள் அமைச்சர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இவர்களுக்கு தெம்பூட்டும் வகையில், 'சரியான கூட்டணி அமையாத பட்சத்தில், சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 40 இடங்களிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்; வருவதை எதிர்கொள்வோம்' என, பழனிசாமி தைரியமூட்டி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேசிக்கிட்டு தான் இருக்காங்க
! சென்னையில்நடந்த தேர்தல் அறிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி: எங்களது நிலைப்பாடு, பா.ஜ., அல்லாத கூட்டணி தான். பா.ஜ.,வுடன் கூட்டணி என்பது, இப்போதும், எப்போதும் இல்லை; அதில் பின்வாங்கும் எண்ணம் இல்லை. சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகள், மீண்டும் கூட்டணிக்கு வருவதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. கூட்டணிக்காக பெரிய கட்சிகளும் எங்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

