பழனிசாமியை கிண்டலடித்த ஆதவ் விஜய் கண்டிப்பால் மன்னிப்பு கேட்டார்
பழனிசாமியை கிண்டலடித்த ஆதவ் விஜய் கண்டிப்பால் மன்னிப்பு கேட்டார்
ADDED : ஜூன் 02, 2025 03:59 AM
சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை கிண்டலடித்த, த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை செயலர் ஆதவ் அர்ஜுனா, மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
த.வெ.க., சார்பில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா, மாமல்லபுரத்தில் 30ம் தேதி நடந்தது.
விழா ஏற்பாடுகளை, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை செயலர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது இருவரும் பேசிக்கொண்ட வீடியோ பரவியது.
ஆனந்திடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, 'அண்ணாமலையாவது 10 பேரை கூட வைத்துக்கொண்டு, தேர்தலில் நின்று 18 சதவீத ஓட்டு வாங்கினார்.
'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை நம்பி, எவனும் கூட்டணிக்கு வருகிற மாதிரி தெரியவில்லை' என, கிண்டலடித்தார். இது தொடர்பான வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் பரவியது.
இதற்கு, அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு கிளம்பியது. கூட்டணி தொடர்பாக மறைமுக பேச்சு நடந்து வரும் நிலையில், த.வெ.க., தலைவர் விஜயும், வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக, ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவை கண்டித்துள்ளார்.
இதையடுத்து, ஆதவ் அர்ஜுனா நேற்று வெளியிட்ட அறிக்கை: என் தனிப்பட்ட உரையாடல் வீடியோ, பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான்.
அதை தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் என் பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு, அது நன்கு தெரியும்.
என் அரசியல் பயணத்தில், எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குல்கள் முன்வைக்கப்படும்போது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது.
அப்படி இருக்கையில், அந்த வீடியோவில் வெளியான வார்த்தைகள், என் இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புகொள்கிறேன். அதற்காக உண்மையாகவும், நேர்மையாகவும், என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும், என் அரசியல் வாழ்வில், ஒரு கற்றலாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். அந்த வகையில் கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே என் இலக்கு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

