ADDED : மார் 13, 2024 01:34 AM
சென்னை:தமிழக பா.ஜ., சார்பில், போதை பொருளை ஒழிக்க வலியுறுத்தி, சென்னை செங்குன்றத்தில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பா.ஜ., நிர்வாகியுமான நடிகை குஷ்பு பேசுகையில், 'தாய்மார்களுக்கு, 1,000 ரூபாய் கொாடுத்தா, பிச்சை போட்டா, அவர்கள் உங்களுக்கு ஓட்டு போட்டு விடுவார்களா' என்றார். இதற்கு, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து குஷ்பு அளித்துள்ள விளக்கம்:
செய்திகளில் இடம் பெற அறிவாலயம், 'ஸ்டாக் புரோக்கர்ஸ்'களுக்கு குஷ்பு தேவை; குஷ்பு இல்லை என்றால், யாரும் அவர்களை சீண்ட மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் தகுதியற்றவர். முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கியதை, பிச்சை என்று, மாறன் விமர்சித்தார். அதை யாரும் கண்டித்ததாக தெரியவில்லை.
'பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறார்கள்' என்று அமைச்சராக இருந்த பொன்முடி கூறிய போதும், 'ஐகோர்ட் மதுரை கிளை கருணாநிதி போட்ட பிச்சை' என்று அமைச்சர் வேலு சொன்ன போதும், நீங்கள் அனைவரும் பார்வையற்றவர்களாகஇருந்தீர்களா...
'டாஸ்மாக்' கடைகளில் செலவழிக்கும் பணத்தை சேமிக்க, குடும்ப பெண்களுக்கு உதவுங்கள்; பெண்களை சுதந்திரமாக்குங்கள். நீங்கள் கொடுக்கும் பணத்தை விட, மது பிரியர்களால் பெண்கள் படும் சிரமம் அதிகம். உங்கள் பொய் பிரசாரத்தை தொடரவும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

