ADDED : மார் 08, 2024 10:57 PM

சென்னை:'தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி பிடித்திருந்தால், கட்சியில் உறுப்பினராக இணையலாம்' என, அக்கட்சியின் தலைவரான, நடிகர் விஜய் கூறியுள்ளார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில், அரசியல் கட்சி துவங்குவதாக பிப்., 2ம் தேதி அறிவித்தார். கட்சிக்கு இரண்டு கோடி உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. உறுப்பினர் அட்டையை எளிதாக பெற, மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த செயலியை, சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், நேற்று விஜய் அறிமுகம் செய்தார். சமூக வலைதளங்களில் வழங்கப்பட்ட ரகசிய குறியீட்டை பயன்படுத்தி உள்நுழைந்து, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்து, உறுப்பினர் அட்டையை, 'ஸ்மார்ட் கார்ட்' வடிவில் உடனுக்குடன் பெற வசதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, முதல் ஆளாக, தன் உறுப்பினர் அட்டையை விஜய் பெற்றார்.
அப்போது அவர் கூறியதாவது:
மகளிர் அனைவருக்கும் என் அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள். இந்த நன்னாளில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை நான் பெற்றுக்கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை பின்பற்றி, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து மக்கள் பணி செய்ய விரும்பினால், கட்சியின் உறுதிமொழியை படித்து விட்டு பிடித்திருந்தால், சுலபமான முறையில் உறுப்பினராகலாம். தமிழக மக்களின் வெற்றிக்கான என் பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைந்து எதிர்வரும் சட்டசபை தேர்தலில் சரித்திரம் படைப்போம்.
இவ்வாறு நடிகர் விஜய் கூறினார்.

