அடுத்த 100 நாட்களுக்கான செயல் திட்டம்: அறிக்கை தாக்கல் செய்ய பிரதமர் உத்தரவு
அடுத்த 100 நாட்களுக்கான செயல் திட்டம்: அறிக்கை தாக்கல் செய்ய பிரதமர் உத்தரவு
ADDED : பிப் 25, 2024 05:40 AM

புதுடில்லி,: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அடுத்த 100 நாட்களுக்கான தெளிவான செயல் திட்டத்தை அடுத்த மாதம் 3ம் தேதி கூட உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யும்படி, மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் - மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மத்திய அரசின் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கடந்த 21ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அடுத்த 100 நாட்களுக்கான செயல்திட்டங்களை வகுக்கும்படி மத்திய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான தெளிவான செயல்திட்டத்தை வகுத்து, அடுத்த மாதம் 3ம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யுமாறும் மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக, மூத்த அரசு அதிகாரிகள் போன்ற அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளை ஒருங்கே பெற்று, செயல் திட்டத்தை உருவாக்கவும் பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

