ADDED : டிச 26, 2025 02:55 AM

ராமநத்தம்: ராமநத்தம் அருகே அரசு பஸ் மோதி, ஒன்பது பேர் பலியான வழக்கில், டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை, மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம், 25க்கும் மேற்பட்ட பயணியருடன், அரசு விரைவு பஸ் வந்து கொண்டிருந்தது. மதுரை, ஒத்தக்கடையை சேர்ந்த டிரைவர் தாஹா அலி, 45, பஸ்சை ஓட்டினார்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த எழுத்துார் அருகே வந்த போது, பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த இரு கார்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில், இன்னோவா காரில் பயணித்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜரத்தினம், 67, மஹிந்திரா காரில் பயணித்த திருச்சி மாவட்டம், காட்டூரைச் சேர்ந்த முகமது பாரூக், 37, உட்பட ஒன்பது பேர் பலியாகினர்.
படுகாயமடைந்த, புதுக்கோட்டை, பிள்ளை தண்ணீர் பந்தலை சேர்ந்த முகமது காசிம், 55, அவரது மனைவி அமிஷா 52, பேரன்கள் அஜிஸ், 8, அஹர், 6, ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர், தாஹா அலியை நேற்று கைது செய்தனர்.
பணிமனை அதிகாரிகள் கண்டுகொள்வரா?
போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து அரசு பஸ்கள் வெளியே செல்லும் முன்பாக பஸ்களில் இயந்திர கோளாறு, டயர்களில் காற்றின் அளவு, டீசல் அளவு, கண்ணாடி வைபர் உள்ளிட்டவைகளை சரிபார்ப்பது வழக்கம். ஆனால், இது பெயரளவில் மட்டுமே நடைபெறுகிறது.
தனியார் பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது, தமிழகம் முழுதும் தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். இதே போன்று, மாநிலம் முழுதும் அரசு பஸ்களை அதிகாரிகள் முழுமையாக பரிசோதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

