மக்கள் நலப்பணிகள் மீண்டும் துவங்கும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி
மக்கள் நலப்பணிகள் மீண்டும் துவங்கும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி
ADDED : செப் 26, 2024 11:02 PM
ஆனந்த் நிகேதன்:டில்லி சாலைகளை முதல்வர் ஆதிஷியுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஆய்வு செய்தார். “பா.ஜ.,வால் ஸ்தம்பித்துள்ள மக்கள் நலப் பணிகள் இப்போது மீண்டும் துவங்கப்படும். நகரில் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும்,” என அவர் தெரிவித்தார்.
டில்லி பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஆனந்த் நிகேதன் பகுதியில் சாலைகளை முதல்வர் ஆதிஷியுடன் இணைந்து எம்.எல்.ஏ.,வும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஆய்வு செய்தார்.
அவருடன் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, எம்.எல்.ஏ., திலீப் பாண்டே ஆகியோரும் இருந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
மக்களுக்கான பணிகளைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் டில்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதே பா.ஜ.,வின் இலக்காக இருந்தது. அதனால் தான் நான் சிறைக்கு அனுப்பப்பட்டேன்.
நான் திரும்பி வந்துவிட்டேன். முடங்கிய பணிகள் மீண்டும் துவங்கப்படும் என்று மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். அவர்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.
நாங்கள் 24 மணி நேரமும் மக்களுக்கான அதிரடி நடவடிக்கையில் இருக்கிறோம். சிறையில் இருந்தபோதும் நான் அதிரடி நடவடிக்கையில் இருந்தேன்.
டில்லியில் வேலைகளை நிறுத்துவதன் மூலம் ஆம் ஆத்மி அரசு மீது அவதுாறு சொல்வதே அவர்களின் நோக்கம். ஆம் ஆத்மியும் அதன் அரசும் மக்கள் பணிகளை நிறுத்த அனுமதிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

