'தோளில் சுமந்த பார்வை மாற்றுத்திறனாளி' தி.மு.க.,வுக்கு மறைமுகமாக கண்டனம்
'தோளில் சுமந்த பார்வை மாற்றுத்திறனாளி' தி.மு.க.,வுக்கு மறைமுகமாக கண்டனம்
ADDED : ஏப் 08, 2025 04:14 AM

கோவை: 'சமூக நீதியை துாக்கி பிடிப்பதாக பேசும் தி.மு.க., அமைச்சர் கூன், குருடு என்று பேசியது ஏற்புடையதல்ல' என, பார்வை மாற்றுத்திறனாளிகள் கொந்தளிக்கின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நடந்த, தி.மு.க., பொதுக்கூட்டத்தில் 'நொண்டி, கூன், குருடு போன்றவர்களை சேர்த்துக்கொண்டு, தி.மு.க.,வை எதிர்க்கப்பார்க்கின்றனர்' என, அமைச்சர் துரைமுருகன் பேசியிருந்தார். இந்த பேச்சு, மாற்றுத்திறனாளிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய பார்வையற்றோர் இணையம் தென் மாநில திட்ட இயக்குனர் மனோகரன் கூறியதாவது:
சமூக நீதியை துாக்கி பிடிப்பதாக, பேசிக் கொண்டிருக்கும் தி.மு.க.,வில், மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசிய பேச்சு ஏற்புடையதல்ல. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கண்டிக்கிறோம்.
ஊனத்தை சுட்டிக் காட்டி, மாற்றுத்திறனாளிகள் எதற்கும் உபயோகம் அற்றவர்கள் என்று நினைப்பதை ஏற்க முடியாது. கால் குறைபாடு உள்ள ஓர் மாற்றுத்திறனாளி, பார்வை குறைபாடு உள்ள ஓர் மாற்றுத்திறனாளியை தோளில் சுமந்து சென்று, அவர்கள் இலக்கை அடைந்த கதையை அமைச்சர் அறியாதது அல்ல.
தி.மு.க.,கட்சி, அமைச்சரின் பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும். அமைச்சர் துரைமுருகன் பயன்படுத்திய வார்த்தைகளை, திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
'கால் குறைபாடு உள்ள ஓர் மாற்றுத்திறனாளி, பார்வை மாற்றுத்திறனாளியை தோளில் சுமந்துள்ளார்' என, தேர்தல் சமயங்களில் தி.முக., கூட்டணி கட்சிகளின் உதவியுடன்தான் வெற்றி பெறுகிறது என்று, மாற்றுத்திறனாளிகள் மறைமுகமாக சாடுகின்றனர்.

