UPDATED : ஜன 10, 2024 03:34 AM
ADDED : ஜன 10, 2024 03:33 AM

''அட, 100 ரூபாய் கூட செலவழிக்க முடியலையான்னு புலம்புதாவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜ் காலனியில், மாநகராட்சி நிர்வாகத்தின் மூலதனமானியம் மற்றும் பொது நிதி, 2.75 கோடி ரூபாய்ல, நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைச்சிருக்காவ... இந்த பணிகளை, போன வருஷம் அக்., 21ல் அமைச்சர்கள் நேரு, சக்கரபாணி பார்வையிட்டாவ வே..
''அப்ப, மாநகராட்சி அதிகாரிகள், நுாலகத்துல முக்கிய நாளிதழ்களை வாங்கி வச்சாவ... பணிகள் எல்லாம் முடிஞ்சு, சமீபத்துல, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமா திறந்து வச்சாரு வே...
![]() |
''ஆனா, அக்., 21ல் வாங்கிய நாளிதழ்கள் தான் நுாலகத்தின் ஸ்டாண்ட்ல இருந்துச்சு... திறந்த அன்னைக்கு வெளியான நாளிதழ்கள் எதையும் வாங்கி வைக்கல வே...
''திறப்பு விழாவுக்கு வந்த கவுன்சிலர்கள், 'அதிகபட்சம், 100 ரூபாய் செலவு செஞ்சிருந்தாலே, இன்னைக்கு வந்த தமிழ், ஆங்கில நாளிதழ்கள் அனைத்தையும் வாங்கி வச்சிருக்கலாம்... இதை செய்றதுல, அதிகாரிகளுக்கு என்ன கஷ்டம்'னு புலம்பிட்டே போனாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஐகோர்ட் உத்தரவையே மதிக்கலைங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''சென்னை, திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றியம், 2வது வார்டு கவுன்சிலர் மல்லிகா மீரான்... இவங்க, விளாங்காடுபாக்கம் ஊராட்சி, திருப்பதி நகர்ல, சுற்றுச்சூழலை பாதிக்கும், முறைகேடான பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்குறதா, 2022ம் வருஷமே அரசிடம் புகார் குடுத்தாங்க...
''புகார்ல, அந்த தொழிற்சாலைக்கு, விளாங்காடுபாக்கம் ஊராட்சியில பெயரளவுக்கு வரி போட்டு, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தாங்க... எந்த நடவடிக்கையும் இல்லாததால, சென்னை ஐகோர்ட்ல வழக்கு போட்டாங்க...
''விசாரிச்ச ஐகோர்ட், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், திட்ட இயக்குனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் மற்றும் புழல் ஒன்றிய அதிகாரி ஆகியோர், 15 நாட்களுக்குள் ஆய்வு செய்து, எட்டு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க, 2023 ஜனவரி 12ல் உத்தரவு போட்டுச்சுங்க...
''ஆனா, ஒரு வருஷம் ஆகியும், எந்த ஆய்வும், நடவடிக்கையும் இல்லாததால, மேற்கண்ட அதிகாரிகள் மேல, கவுன்சிலர் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.


