விடுதலையானார் செந்தில் பாலாஜி; மேள தாளம் முழங்க வரவேற்பு!
விடுதலையானார் செந்தில் பாலாஜி; மேள தாளம் முழங்க வரவேற்பு!
UPDATED : செப் 26, 2024 07:17 PM
ADDED : செப் 26, 2024 05:24 PM

சென்னை: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, விடுதலையாகி வெளியே வந்தார். சிறைக்கு வெளியே திரண்டிருந்த தி.மு.க., தொண்டர்கள், பட்டாசு, மேள தாளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி, பணம் மோசடி செய்தார் என்பது குற்றச்சாட்டு.இதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிந்தனர். இதே குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையும் அவர் மீது வழக்கு பதிந்து கடந்தாண்டு ஜூன் 14ல் கைது செய்தனர்.
15 மாதங்களுக்கு மேலாக வெவ்வேறு நீதிமன்றங்களில் முட்டி மோதிய நிலையில், அவருக்கு இன்று உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.இன்று விடுதலை ஆகி விடுவார் என்று செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள், தி.மு.க.,வினர் பலரும் மகிழ்ச்சியில் இருந்தனர். முதல்வர் ஸ்டாலினும் வருக வருக என்று வரவேற்று பதிவிட்டார்.
புழல் சிறையில் இருக்கும் அவரை வெளியில் கொண்டு வருவதற்காக, ஜாமின் ஆவணங்களை, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தி.மு.க., வக்கீல்கள் இன்று தாக்கல் செய்தனர். அப்போது புதிய சிக்கல் உருவானது.
அப்போது முதன்மை செஷன்ஸ் நீதிபதி கார்த்திகேயன், 'ஜாமின் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவில் சில குழப்பங்கள் உள்ளன. எனவே பிணை உத்தரவாதங்களை இங்கு தாக்கல் செய்ய வேண்டாம். விசாரணை அதிகாரி முன்பே தாக்கல் செய்யுங்கள்' என்று கூறி விட்டார்.இதனால் என்ன செய்வதென தெரியாமல் தி.மு.க., வக்கீல்கள் தவித்தனர். கடைசி நேரத்தில் எப்படி விசாரணை அதிகாரியிடம் போக முடியும். வழக்கமாக நீதிமன்றத்தில் தானே தாக்கல் செய்வோம் என்று தி.மு.க., வக்கீல்கள் கூறினர். அதை நீதிபதி ஏற்க மறுத்து அமலாக்கத்துறை வக்கீலையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
நீதிபதி சரமாரி கேள்வி
செந்தில் பாலாஜிக்கு, அவரது உறவினர்கள் தியாகராஜன், சிவப்பிரகாசம் இருவரும் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்தனர். அதை ஆய்வு செய்த நீதிபதி, '60 வயதான ஒருவர், 69 ஆண்டுகளாக செந்தில் பாலாஜியை தெரியும் என்று எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்' என்று கேள்வி எழுப்பினார். இதில் பதில் கூற முடியாமல் தி.மு.க., வக்கீல்கள் திணறினர்.
கடைசியில் விசாரணைக்கு அமலாக்கத்துறை வக்கீல் நேரில் ஆஜரானார். அவர், 'ஜாமின் உத்தரவாதத்தை நீதிமன்றம் ஏற்பதில் எங்களுக்கு ஆட்சேபம் எதுவும் இல்லை' என்று கூறினார். இதையடுத்து ஜாமின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தெரிவித்தார். இதனால் செந்தில் பாலாஜி விடுதலையாவதில் இருந்த கடைசி சிக்கலும் நீங்கியது.
ஒரு வழியாக விடுதலை
இதையடுத்து ஜாமின் உத்தரவாதம் ஏற்கப்படுவதாகவும், செந்தில் பாலாஜியை விடுதலை செய்யலாம் என்றும், நீதிமன்ற உத்தரவு, இ-மெயில் மூலம் புழல் மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட சிறை அதிகாரிகள், இரவு 7:15 மணிக்கு செந்தில் பாலாஜியை விடுவித்தனர்.
மொத்தம் 471 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு வெளியே வந்த அவருக்கு, சாலையில் திரண்டிருந்த தி.மு.க., தொண்டர்கள், மேளதாளம், பட்டாசு முழங்க வரவேற்பு அளித்தனர். சிறையில் இருந்து விடுதலையாகும் செந்தில் பாலாஜிக்கு வரவேற்பு அளிக்க ஏராளமானோர், கார்களில் வந்ததால் அந்த வழியில் வாகன போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

