விஜய் கட்சி மாநாட்டு திடலில் குவியும் தொண்டர் கூட்டம்!
விஜய் கட்சி மாநாட்டு திடலில் குவியும் தொண்டர் கூட்டம்!
UPDATED : அக் 27, 2024 01:43 PM
ADDED : அக் 27, 2024 08:25 AM
முழு விபரம்

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் இன்று மாலை நடக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வாகன போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்பதால், 5 கிலோமீட்டருக்கும் மேல், தொண்டர்கள் நடந்து சென்று திடலை அடைகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி உள்ள நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று (அக்.,27) நடத்துகிறார். கட்சியின் முதல் மாநாடு என்பதால், விஜய் என்ன பேச உள்ளார் என தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். திரையுலகில், ஏற்கனவே விஜய்க்கு மக்கள் ஆதரவு அதிகம்.
விஜய் கட்சி கொடியை அறிமுகம் செய்த போது, மாநாடு அன்று தான் கட்சியின் கொள்கை மற்றும் அடுத்தக்கட்ட திட்டம் குறித்து அப்டேட் வரும் என்றார். இதுதான் மாநாட்டிற்கு தொண்டர்கள் எதிர்பார்ப்பை அதிகரிக்க காரணம்.
இந்நிலையில், இன்று (அக்.,27) மதியத்திற்கு மேல் தான் மாநாடு துவங்குகிறது. தற்போதே திடலில், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இரவு முதலே குவிந்து இருந்த தொண்டர்கள் அருகே இருந்தே இட்லி கடையில் குவிந்தனர். முண்டியடித்து சென்ற தொண்டர்களால் மாநாட்டு திடலில் கடைசி 4 வரிசையில் இருந்த சேர்கள் சேதமடைந்தன. மாநாட்டு திடலில் குவிந்த தொண்டர் ஒருவர் கூறியதாவது: 2026ல் விஜய் தான் முதல்வர்.
எந்தவொரு மாற்றமும் கிடையாது. விஜய் இளைய தளபதி. நான் ரஜினி ரசிகர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்தேன் வரவில்லை. இளைஞரான விஜய், மக்களுக்கு நல்லது செய்வார் என்பதால், எம்ஜிஆர் கட்சியில் இருந்த நான், விஜய் கட்சிக்கு வந்து விட்டேன். இவ்வாறு தொண்டர் தெரிவித்தார்.
மற்றொரு தொண்டர் ஒருவர் கூறியதாவது: நான் சர்வீஸ் இன்ஜினியராக சென்னையில் வேலைபார்த்து கொண்டு இருக்கிறேன். 10 நாள் லீவு போட்டு மாநாட்டிற்கு வந்துள்ளேன். மாநாடு அல்ல எங்களுக்கு தீபாவளி திருவிழா என்றும், சொந்த செலவில் பேனர்கள் அடித்து நெடுஞ்சாலையில் பார்க்கிங் , நோ பார்க்கிங் பேனர்களை வைத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
3 பேர் பலி!
திருச்சியில் இருந்து வந்த த.வெ.க., தொண்டர்களின் கார் உசேன் பேட்டை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். 2 பேர் உயிரிழந்தனர்.
மாநாட்டிற்கு வரும் போது, சென்னையில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால், த.வெ.க., மாநாட்டுக்கு வந்தவர்களில் விபத்துகளில் சிக்கி, இதுவரை 3 பேர் உயிரிழந்தனர்.
50க்கும் மேற்பட்டோர் மயக்கம்
வெயிலால், மாநாட்டு திடலில், 50க்கும் மேற்பட்டோர் ஆங்காங்கே மயங்கி விழுந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
வழிபாடு
விக்கிரவாண்டியில் த.வெ.க., மாநாட்டு திடல் அருகிலுள்ள பிள்ளையார் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயிலில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார்.

