திருச்செந்தூர் கோவிலில் அபிஷேக இடமாற்றம் ரத்து செய்ய வழக்கு
திருச்செந்தூர் கோவிலில் அபிஷேக இடமாற்றம் ரத்து செய்ய வழக்கு
ADDED : பிப் 21, 2024 06:05 AM

மதுரை : திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவில் பச்சை சாத்தி அபிஷேகம் இடமாற்றத்திற்கு எதிரான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டியைச் சேர்ந்த ரவி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி திருவிழாவை ஒட்டி பச்சை சாத்தி அபிஷேகம் இன்று நடக்கிறது. சண்முகர் சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி அலங்காரங்களில் எழுந்தருளி அருள்பாலிப்பார்.
இது, ஆண்டுதோறும் சிவன் கோவில் கலா மண்டபத்திற்கு கீழ்புறம் சண்முகர் பீடத்தில் நடைபெறும். இம்முறை அபிஷேகத்தை சிவன் கோவில் வெளிப்பிரகாரம் தகரக் கொட்டகையில் வைத்து நடத்த உள்ளனர். இது, ஆகமத்திற்கு எதிரானது.
ஏற்கனவே நடந்த இடத்தில் அபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்த மனுவை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
கோவில் தரப்பில், 'பக்தர்கள் அதிகம் பேர் பங்கேற்கும் வகையில் குடவரையில் தீபாராதனை நடக்கும் இடத்தில் அபிஷேகம் நடைபெறும். இதற்கு கட்டளைதாரர்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை' என தெரிவிக்கப்பட்டது. விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு ஒத்திவைத்தனர்.

