விபத்தை தவிர்க்க முயன்ற கார் எதிரே வந்த காரில் மோதி 3 பேர் பலி
விபத்தை தவிர்க்க முயன்ற கார் எதிரே வந்த காரில் மோதி 3 பேர் பலி
ADDED : ஏப் 21, 2024 11:47 PM

வானுார் : தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் அடுத்த யாகீன்பூரைச் சேர்ந்தவர் ஜடாமனிஷ், 28. ஹைதராபாத், செட்டி காதர் கூட்ரோடைச் சேர்ந்தவர் கீர்த்தி, 27. நேற்று முன்தினம் புதுச்சேரி வந்த இருவரும் நேற்று காலை, 6:00 மணிக்கு 'கியா' காரில் ஹைதராபாத் புறப்பட்டனர். காரை, ஹைதராபாத்தைச் சேர்ந்த விஜயகுமார், 38, ஓட்டினார்.
காலை, 6:45 மணிக்கு புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் மொளசூர் சந்திப்பு அருகே குறுக்கே பைக் வந்தது. இதனால், விஜயகுமார் திடீரென பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்திசையில் பாய்ந்து, புதுச்சேரி நோக்கிச் சென்ற, 'எட்டியாஸ்' கார் மீது மோதியது.
இந்த விபத்தில் கீர்த்தி மற்றும் எட்டியாஸ் காரில் வந்த கிளியனுார் அடுத்த தைலாபுரத்தைச் சேர்ந்த பழனி, 52, ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
பழனி மனைவி ஜெயந்தி, 45, டிரைவர் திருச்சிற்றம்பலம் கூட்ரோடைச் சேர்ந்த சூரியநாராயணன், 28, கியா காரில் வந்த ஜடாமனிஷ், விஜயகுமார் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
கிளியனுார் போலீசார், நான்கு பேரையும் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஜடாமனிஷ் இறந்தார்.
இந்த விபத்தால், திண்டிவனம் - புதுச்சேரி பைபாசில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிளியனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

