ADDED : ஏப் 30, 2025 06:00 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் வெவ்வேறு சம்பவங்களில் நான்கு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தென்காசியில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஏப்., 24 பிருந்தா என்பவரை பாலியலுக்கு அழைத்து சென்ற மூன்று வாலிபர்கள், இடையூறாக இருந்த பிருந்தாவின் 2 வயது பெண் குழந்தை தர்ஷினிக்கு மது கொடுத்து தாக்கி கொன்றனர். பிருந்தா மற்றும் அவரது நண்பர்கள் பெஞ்சமின் 25, முத்து சுடர் 28, லிங்க செல்வன் 29, கைது செய்யப்பட்டனர்.
கூடங்குளம் அருகே காந்திநகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சேகர் 49, ஏப்., 26 நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட மோதலில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
ஆவுடையாபுரம் இசக்கிமுத்து 23, சகோதரர் வைணவ பெருமாள் 26, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பழவூர் அருகே செட்டிகுளத்தை சேர்ந்தவர் ரெஜிமென் 19. கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிலும் பாலிடெக்னிக் மாணவர். இவர் இரவு நேரங்களில் காற்றாலை நிறுவனங்களில் பணிபுரிந்து ரூ.28,000 சேமித்து இருந்தார்.
பணத்தை அதே பகுதியைச் சேர்ந்த சந்தனகுமாரிடம் 35, கொடுத்திருந்தார். சந்தனகுமார் பணத்தை திரும்ப தராததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சந்தனகுமார் ரெஜிமனை அரிவாளால் வெட்ட முயன்றார். ஆனால் ரெஜிமன் அரிவாளை பறித்து சந்தனகுமாரை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் இறந்தார்.
பொன்னாக்குடியைச் சேர்ந்தவர் அருணாச்சலத்துக்கும் 49, சகோதரர் மாரிமுத்துவிற்கும் சொத்து தொடர்பாக வாக்குவாதம் இருந்தது. அருணாச்சலம் அடிக்கடி மாரிமுத்துவிடம் சொத்து கேட்டு தகராறு செய்ததால் மாரிமுத்து மகன் இசக்கிமுத்து 28, சித்தப்பா அருணாச்சலத்தை கம்பியால் அடித்து கொலை செய்தார்.
டாஸ்மாக் பார் கொலை
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே துப்பார்க்குடி அரசு டாஸ்மாக் மது பாரில் நேற்று மாலை சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். சிகரெட் கேட்டது தொடர்பான தகராறில் மாரிமுத்து 30, என்பவர் மதுபாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்டார். இவர் திருநெல்வேலியில் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். வேல்முருகன் உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளகாதல் பிரச்னையில் கொலை
தென்காசி மாவட்டம் கடையம் அருகே நாலாங்கட்டளையைச் சேர்ந்தவர் ஆமோஸ் 26. கட்டட தொழிலாளி. இவருடன் வேலை செய்த அந்தோணி அடிக்கடி ஆமோஸ் மனைவி நந்தினியுடன் அலைபேசியில் பேசி காதலை வளர்த்தார். இதை ஆமோஸ் கண்டித்தார். ஏப்., 26 வீட்டில் இருந்த ஆமோசை அந்தோணி சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். அந்தோணி, ஆமோஸ் மனைவி நந்தினி கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் நடந்துள்ள 6 கொலைகளிலும் மது, கஞ்சா உள்ளிட்ட போதை தான் காரணமாக இருந்துள்ளது.

