ADDED : நவ 15, 2024 11:54 PM
சென்னை:வரத்து குறைவால், பூண்டு விலை தொடர்ந்து அதிகரித்து, சில்லரை விலையில், கிலோ 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில், பூண்டு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில், மலை பூண்டு சாகுபடி நடக்கிறது. பூண்டு உற்பத்தியில், உலக அளவில் இந்தியா, இரண்டாம் இடத்தில் உள்ளது.
இங்கு உற்பத்தியாகும் பூண்டு, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது, நாட்டில் பூண்டு கையிருப்பு குறைந்துள்ளது; ஏற்றுமதி அதிகரித்துள்ளது. புதிய பூண்டு அறுவடை இன்னும் துவங்கவில்லை. இதனால், தேவை அதிகரித்து, பூண்டு விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
சென்னை கோயம்பேடு மளிகை சந்தையில், 1 கிலோ முதல் தர பூண்டு மொத்த விற்பனையில் 400 ரூபாய், சில்லரை விற்பனையில் 500 ரூபாய் என விற்கப்படுகிறது.
இரண்டாம் தர பூண்டு, சில்லரை விற்பனையில், 400 ரூபாய்க்கும், மூன்றாம் தர பூண்டு 300 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய பூண்டு 1 கிலோ, 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

