ஏரிகளின் நீர் தரத்தை கண்காணிக்க ரூ.5 கோடியில் ஏ.ஐ., தொழில்நுட்பம்
ஏரிகளின் நீர் தரத்தை கண்காணிக்க ரூ.5 கோடியில் ஏ.ஐ., தொழில்நுட்பம்
ADDED : அக் 31, 2024 03:48 AM
சென்னை: ஊட்டி, கொடைக்கானல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் தரத்தை, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு முறையில் கண்காணிப்பதற்கான பணிகளை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் துவக்கி உள்ளது.
தமிழகத்தில் ஏரிகள், குளங்களை, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் நடவடிக்கைகள், பல்வேறு துறைகள் வாயிலாக எடுக்கப்படுகின்றன. நீர்வளத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள், இதில் இணைந்து செயல்படுகின்றன.
இருப்பினும், பல்வேறு பகுதிகளில் மருத்துவக் கழிவுகள், குப்பை கொட்டுவது போன்றவற்றால், குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை கழிவு நீரால், ஏரிகளில் நீர் கடுமையாக மாசுபடுகிறது.
இந்நிலையில், அதிக அளவு மாசுபடாத பல்வேறு ஏரிகளை அடிப்படையாக வைத்து, மக்களுக்கான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதனால், ஏரிகளின் நீர் தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, நீர் நிலைகளில் மாசு ஏற்படுவதை தடுக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியம் கள நிலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேசிய நீர் தர கண்காணிப்பு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஏரிகளின் நீர் தரத்தை கண்காணிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஏரிகளில் நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தர பரிசோதனை தரவுகள் தொகுக்கப்படுகின்றன.
இதில் முதல்முறையாக, பூண்டி, செம்பரம்பாக்கம், ஊட்டி, கொடைக்கானல் ஏரிகளின் நீர் தரத்தை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்த, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க, சென்னை ஐ.ஐ.டி., வல்லுனர்களுடன் பேச்சு நடந்து வருகிறது.
அவர்கள் உதவியுடன் இதற்கான புதிய திட்டம், விரைவில் செயல்பாட்டுக்கு வரும். இதனால், ஏரி நீரில் ஏதாவது மாசு கலந்தால், உடனடியாக அது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தெரிந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

