கம்பத்தில் போலீஸ் போல் நடித்து ரூ.39 ஆயிரம் பறித்த 4 பேர் கைது மாமூல் வாங்க திரும்ப வந்த போது சிக்கினர்
கம்பத்தில் போலீஸ் போல் நடித்து ரூ.39 ஆயிரம் பறித்த 4 பேர் கைது மாமூல் வாங்க திரும்ப வந்த போது சிக்கினர்
ADDED : ஜன 24, 2025 01:49 AM

கம்பம்:தேனி மாவட்டம்கம்பம் வடக்குபட்டி பகுதியில் ஜன.21 இரவு 8:00 மணியளவில் 2 இளம் பெண்கள் 2 இளைஞர்கள் காக்கி பேன்ட், டி சர்ட் அணிந்து போலீஸ் தோரணையில் குரங்கு மாயன் தெருவில் உள்ள ஜெயக்குமார் 22, என்பவர் வீட்டிற்கு சென்று, ' உள்ளே கஞ்சா இருக்கிறதா' என கேட்டு மிரட்டினர். 'நான் தற்போது கஞ்சா விற்பதில்லை' என அவர் மறுத்தபோது ' நீங்கள் கஞ்சா விற்பது தெரியும். உங்கள் மீது வழக்கு போடாமல் இருக்க ரூ.10 ஆயிரம் கொடுங்கள்' என மிரட்டி பணம் வசூலித்தனர். அதே போல அஜித் என்பவரிடம் ரூ.10 ஆயிரம், நந்தினி என்பவரிடம் ரூ.12 ஆயிரம், வீரமணி என்பவரிடம் ரூ. 7 ஆயிரம் என மிரட்டி மொத்தம் ரூ.39 ஆயிரம் வசூலித்து சென்றனர்.
நேற்று முன்தினம் ஜெயக்குமாரின் அலைபேசிக்கு தொடர்பு கொண்ட அக்கும்பல்,' கம்பத்தில் குறிப்பிட்ட இடத்தில் காத்திருப்பதாகவும், பணத்துடன் வருமாறு' மிரட்டினர்.
சந்தேகமடைந்த அவர் கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தார். இன்ஸ்பெக்டர் பார்த்திபன் எஸ்.ஐ. க்கள் நாகராஜ் , இளையராஜா தலைமையிலான போலீஸ் குழுவினர் சென்று நால்வரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் போலி போலீஸ் என தெரிந்தது.
நால்வர் கைது
விசாரணையில் அவர்கள் சின்னமனுார் ராதாகிருஷ்ணா ரைஸ் மில் தெருவை சேர்ந்த அன்னம் 21 , விஜயலட்சுமி 20, முத்துப் பாண்டி 19, சாமுண்டீஸ்வரன் 19, என தெரியவந்தது. இதில் அன்னம் ஏற்கெனவே கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தவர். விஜயலட்சுமி, அன்னத்தின் வீட்டுக்கு பக்கத்தில் வசிப்பவர். மற்ற இருவரும் அதே தெருவை சேர்ந்தவர்கள். இவர்கள் நால்வரும் சேர்ந்து குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க கஞ்சா வியாபாரம் செய்ய முடிவெடுத்து சிலரை மிரட்டி பணம் பறிக்கலாம் என திட்டமிட்டு சிக்கினர். இவ்வழக்கில் விரைவாக செயல்பட்டு போலி போலீசாரை கைது செய்த போலீசாரை எஸ்.பி. சிவபிரசாத் பாராட்டினார்.

