"ஜாபர் சாதிக் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்": அமலாக்கத்துறை தகவல்
"ஜாபர் சாதிக் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்": அமலாக்கத்துறை தகவல்
ADDED : ஏப் 13, 2024 04:38 PM

சென்னை: 'ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய ரூ.40 கோடியை சினிமா தயாரிப்பு, ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ளார்' என அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தி.மு.க., முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து, டில்லி திஹார் சிறையில் அடைத்துள்ளனர். ஜாபர் சாதிக், திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்டோர், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருப்பதை, அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரித்து உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில், சென்னை, தி.நகர் ராஜா தெருவில் உள்ள திரைப்பட இயக்குனர் அமீர் அலுவலகம், சாந்தோம் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, புரசைவாக்கத்தில் உள்ள, ஜே.எஸ்.எம்., ரெசிடென்சி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஜாபர் சாதிக் நடத்தி வரும் டீ கடையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் 9ம் தேதி சோதனை நடத்தினர்.
ரூ.21 கோடி கறுப்பு பணம்
இது குறித்து இன்று (ஏப்ரல் 13) அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்ரல் 9ம் தேதி சென்னை, மதுரை மற்றும் திருச்சியில் பல்வேறு இடங்களில் ஜாபர் சாதிக் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் சோதனை நடத்தப்பட்டது. பல்வேறு குற்ற ஆவணங்கள் மற்றும் சொத்து விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய ரூ.40 கோடியை சினிமா தயாரிப்பு, ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ளார். சினிமாவில் 6 கோடியை நேரடியாக முதலீடு செய்துள்ளார். அதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஜாபர் சாதிக்கின் வங்கி கணக்கில் ரூ.21 கோடி கறுப்பு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

