நில மோசடி வழக்கில் சிக்கிய 29,000 பேர் கண்காணிப்பு
நில மோசடி வழக்கில் சிக்கிய 29,000 பேர் கண்காணிப்பு
ADDED : மே 10, 2025 12:47 AM
சென்னை:போலி ஆவணம் தயாரிப்பு, நிலம் அபகரிப்பு, நிலம் மோசடி தொடர்பான வழக்குகளில் கைதாகி விடுதலையான, 29 ஆயிரம் பேரின் நடவடிக்கையை, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் ஆண்டுதோறும், சொத்து பிரச்னை தொடர்பாக, 25,000 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டில், சொத்து தொடர்பான வழக்குகள், 24,000 ஆக குறைந்துள்ளன. இனி வரும் ஆண்டுகளில், சொத்து தொடர்பான குற்றங்களை குறைக்க, நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதற்காக, குற்றம் மற்றும் குற்றவாளிகள் குறித்த வலைப்பின்னல் எனப்படும், சி.சி.டி.என்.எஸ்., வாயிலாக, சொத்து தொடர்பான வழக்கில் சிக்கியவர்கள் குறித்த விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
நில மோசடி, நிலம் அபகரிப்பு உட்பட, சொத்து தொடர்பான வழக்கில் கைதாகி, தண்டனை பெற்று, இரண்டு ஆண்டுகளில் விடுதலையான, 29 ஆயிரம் பேர் விபரங்கள் திரட்டப்பட்டு உள்ளன.
அவர்கள் தற்போது என்ன செய்கின்றனர், புதிதாக வழக்கில் ஏதேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் அனைவரும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இது, குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

