மீட்பு பணிக்கு 21,000 போலீசார் தயார்: டி.ஜி.பி., சங்கர் ஜிவால்
மீட்பு பணிக்கு 21,000 போலீசார் தயார்: டி.ஜி.பி., சங்கர் ஜிவால்
ADDED : அக் 15, 2024 05:22 AM

சென்னை : 'வடகிழக்கு பருவமழை பாதிப்பில் இருந்து மக்களை மீட்க, 21,000 போலீசார் களமிறக்கப்பட்டு உள்ளனர்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புயல், வெள்ளம், கனமழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல்; பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் விதம்; உபகரணங்களை பயன்படுத்தும் விதம் பற்றி, அதிதீவிரப்படை பயிற்சி பள்ளியில், 21,000 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள், மாநகரம் மற்றும் மாவட்டங்களுக்கு, 136 குழுக்களாக பிரித்து அனுப்பப்பட்டு உள்ளனர்.
வடகிழக்கு பருவமழை நிவாரண பணிக்காக, சென்னை அடையாறு பகுதியில் உள்ள மருதம் வளாகத்தில், 24 மணி நேரமும் இயங்கும், மாநில காவல் துறை சிறப்பு கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இவற்றுடன், காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட, மாநகர பேரிடர் மீட்பு சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் இணைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் வாயிலாக தகவல்களை பெற்று, வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைக்கு ஏற்ப, மாநில காவல்துறை சிறப்பு கட்டுப்பாட்டு அறை விரைந்து செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

