ADDED : நவ 13, 2024 11:38 PM
சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அரிசிக்கு பதில் கோதுமையை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம்.
சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில், ஒரு கார்டுதாரருக்கு மாதம் அதிகபட்சம் 10 கிலோ, மற்ற இடங்களில் வசிப்போருக்கு, 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டது. இதற்கு தேவைப்படும் கோதுமையை, மத்திய அரசு வழங்குகிறது.
கடந்த ஆண்டு தமிழகத்திற்கு, மாத கோதுமை ஒதுக்கீடு, 8,500 டன்னாக குறைக்கப்பட்டது. இதனால் கார்டுதாரர்களுக்கு, ஒரு கிலோ - 2 கிலோ என, இருப்பைப் பொறுத்தும், முதலில் வருவோருக்கும் கோதுமை வழங்கப்பட்டது.
பலர் கோதுமை கிடைக்காமல், ஏமாற்றம் அடைந்தனர். தமிழக அரசின் தொடர் கோரிக்கையை ஏற்று, கோதுமை ஒதுக்கீட்டை, 17,100 டன்னாக அதிகரித்து, மத்திய அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது.
அதற்கேற்ப, தற்போது சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில், கார்டுதாரர்களுக்கு தலா 5 கிலோ; மற்ற இடங்களில், 2 கிலோ வரை கோதுமை வழங்கப்படுகிறது.

