சைபர் குற்றவாளிகள் 1,193 பேர் கைது: டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தகவல்
சைபர் குற்றவாளிகள் 1,193 பேர் கைது: டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தகவல்
ADDED : ஜன 01, 2026 01:50 AM

சென்னை: 'சைபர்' குற்றங்கள் தொடர்பாக, கடந்தாண்டில், 1,193 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக, மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையக டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தெரிவித்து உள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இணையவழியில் பண மோசடி செய்வது உள்ளிட்ட, சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து, பொது மக்கள், '1930' என்ற எண் வாயிலாக புகார் அளிக்கலாம்.
புகார்களை பெற, சென்னை அசோக் நகரில் செயல்படும் மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையகத்தில், எட்டு இருக்கைகள் உள்ள அரங்கு இருந்தது.
இது, 9.28 கோடியில், 15 இருக்கைள் அடங்கிய அரங்காக விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது.
சைபர் குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களின் வங்கி கணக்குகளை முடக்க, 36 வங்கிகளுடன் இணைந்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மாவட்டங்களில் செயல்படும் சைபர் காவல் நிலையங்களுக்கு, தடய அறிவியல் கருவிகளும் வழங்கப்பட்டு உள்ளன.
மோசடி நபர்கள் பணத்தை சுருட்டும் முன், வெளி மாநிலத்தைச் சேர்ந்த, 1,012 பேர் உட்பட, 1,212 பேர் பாதிக்கப்படாமல் தடுக்கப் பட்டனர்.
பண மோசடிக்காக துவங்கப்பட்ட, 1,507 சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டன. மாநிலம் முழுதும், 212 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
'ஆப்பரேஷன் ஹைட்ரா' என்ற நடவடிக்கை வாயிலாக, உத்தரகண்ட், ஜார்க்கண்ட், அசாம் மற்றும் டில்லியைச் சேர்ந்த எழு பேர் கைது செய்யப்பட்டனர்.
அந்த வகையில், சைபர் குற்றங்கள் தொடர்பாக, கடந்தாண்டில், 1,193 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், 50 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

