தமிழகத்தில் 5 நாட்களுக்கு 106 பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் 5 நாட்களுக்கு 106 பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: வானிலை மையம் எச்சரிக்கை
UPDATED : ஏப் 03, 2024 01:37 PM
ADDED : ஏப் 03, 2024 01:19 PM

சென்னை: தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 03) முதல் அடுத்த 5 நாட்களுக்கு 106 பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
தமிழத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த 5 நாட்களுக்கு 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அடுத்த 5 நாட்களுக்கு, வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 106 பாரன்ஹீட் வெப்பமும், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 102 பாரன்ஹீட் வெப்பமும், கடலோரப்பகுதிகளில் 99 பாரன்ஹீட் வெப்பமும் இருக்கக் கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு இன்று (ஏப்ரல் 03) 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

