10 புதிய காவல் நிலையங்கள் 3 உட்கோட்டங்கள் உருவாக்கம்
10 புதிய காவல் நிலையங்கள் 3 உட்கோட்டங்கள் உருவாக்கம்
ADDED : டிச 18, 2025 03:35 AM
சென்னை: தமிழக காவல் துறையில், புதிதாக உருவாக்கப்பட்ட மூன்று உட்கோட்டங்களும், 10 காவல் நிலையங்களும், வரும், 22ல் திறக்கப்பட உள்ளன.
மாநிலம் முழுதும், 1,902 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் எல்லைகளும் வரையறுக்கப்பட்டு உள்ளன.
குற்றங்கள் அதிகரிப்பு, மக்கள்தொகை பெருக்கம் உள்ளிட்ட காரணங்களை ஆய்வு செய்து, அதற்கு ஏற்ப, புதிய காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், புதிதாக நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை, தர்மபுரி மாவட்டம் புளிக்கரை, சிவகங்கை மாவட்டம் கீழடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதுார், திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை கோவில் காவல் நிலைய எல்லைகள் வரையறுக்கப்பட்டு, புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மதுரை மாநகரத்தில் சிந்தாமணி, மாடக் குளம், கோவை மாவட்டம் நீலாம்பூர், திருநெல்வேலி மாவட்டம் மேலவாசல், திருப்பூர் மாவட்டம் பொங்கலுார் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, காவல் நிலையங்களின் எண்ணிக்கை, 1,922 ஆக உயர்ந்து உள்ளது. அதேபோல, தமிழக காவல் துறையில், 270 உட்கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
புதிதாக, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் என, மூன்று உட்கோட்டங்கள் உருவாக்கப்பட்டு, அலுவலகங்கள் கட்டப்பட்டு உள்ளன.
இவற்றை, வரும், 22ல், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

