'நம்ம பகுதி நம்ம ரேஷன் கடை' மீண்டும் முடுக்கி விடுமா அரசு?
'நம்ம பகுதி நம்ம ரேஷன் கடை' மீண்டும் முடுக்கி விடுமா அரசு?
ADDED : ஏப் 25, 2024 06:42 AM

சென்னை: சேதமடைந்த ரேஷன் கடைகளை சீரமைக்கும் பணி முடங்கியுள்ளது. இதனால், கார்டுதாரர்கள் சிரமப்பட்டு, உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும் நிலை தொடர்கிறது.
தமிழகத்தில் உள்ள, 36,000 ரேஷன் கடைகளில், 34,000 கடைகளை, கூட்டுறவு சங்கங்களும்; மீதி கடைகளை, உணவுத் துறையும் நடத்துகின்றன. கூட்டுறவுத் கட்டுப்பாட்டில் இருப்பதில், 7,000 கடைகள் வாடகை கட்டடத்திலும், மீதி சொந்த மற்றும் அரசு கட்டடங்களிலும் செயல்படுகின்றன.
சீரமைப்பு பணி
கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், ரேஷன் கடைகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில்லை. இதனால், பெரும்பாலான கடைகளில் போதிய இடவசதி இல்லை. சுவர்கள் மற்றும் மேற்கூரைகள் விரிசல்களுடன், துாசி படர்ந்து காணப்படுகின்றன.
கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன், 2022 ஆகஸ்டில், 'நம்ம பகுதி நம்ம ரேஷன் கடை' என்ற முன்னெடுப்பின் கீழ் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர் உடன் இணைந்து, ரேஷன் கடைகளை சீரமைக்கும் பணிகளை துவக்கினார்.
சொந்த கடைகளில் சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு, அரசின் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள், பாரம்பரிய கலை சின்னங்களுடன் வண்ணம் பூசப்பட்டன. அந்த ஆண்டு இறுதிக்குள், 3,000 கடைகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மோசமான நிலை
கடந்த, 2023ல் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். பின், ரேஷன் கடைகளை புதுப்பொலிவுக்கு மாற்றும் பணி முடங்கியது.
தற்போது, புதுப்பொலிவுக்கு மாறிய கடைகளும் பழைய நிலைக்கு மாறி வருவதுடன், ஏற்கனவே சேதமடைந்த கடைகள் மேலும் மோசமான நிலையில் உள்ளன.
இதனால், கார்டுதாரர்கள் சிரமப்பட்டு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

