தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் மத்திய அரசு குறைத்தது ஏன்?
தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் மத்திய அரசு குறைத்தது ஏன்?
ADDED : ஏப் 28, 2024 05:34 AM

சென்னை: தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கையை விட, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதன் காரணமாகவே மத்திய அரசு, தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
தமிழகத்தில் சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாத கார்டுதாரர்களுக்கும், ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ளவர்களுக்கும், ரேஷனில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. லிட்டர் மண்ணெண்ணெய் விலை, 15 ரூபாய் - 16.50 ரூபாய்.
தலா 2 - 3 லிட்டர்
தமிழக கார்டுதாரர்களுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை, மத்திய அரசு நிர்ணயிக்கிறது. அதன்படி, 2021 ஏப்ரலில் மாதந்தோறும், 75.36 லட்சம் லிட்டர் ஒதுக்கப்பட்டது.
இது, 2022 ஏப்ரல் முதல் மாதம், 45.20 லட்சம் லிட்டராகவும்; 2023 ஏப்ரல் முதல் மாதம், 27.12 லட்சம் லிட்டராகவும் குறைக்கப்பட்டது.
இதனால், கார்டுதாரர்களுக்கு தலா, 2 - 3 லிட்டர் வரை வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டில் ஒரு லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்தாண்டிற்காக இம்மாதம் முதல் வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, 10.84 லட்சம் லிட்டராகக் குறைக்கப்பட்டு உள்ளது. இதற்கு, தமிழகத்தில் சமையல் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதே காரணம் என்பது தெரியவந்துள்ளது.
குறை கூறக்கூடாது
இதுகுறித்து, மத்திய பொது வினியோக திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது, 2.24 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அதே சமயம், காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 2.40 கோடி. மத்திய அரசு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வாயிலாக காஸ் இணைப்பு இல்லாத ஏழை பயனாளிகளை கண்டறிந்து, புதிய காஸ் இணைப்பு வழங்குகிறது.
இதனால்தான், தமிழகத்திற்கான மண்ணெண் ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது குறை கூறுவது ஏற்புடையது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.

