அன்பில் செப்பேடு எங்கே? துப்பு துலக்க திணறும் போலீஸ்
அன்பில் செப்பேடு எங்கே? துப்பு துலக்க திணறும் போலீஸ்
ADDED : ஆக 27, 2024 01:25 AM

சென்னை: சோழர் கால வரலாற்று பொக்கிஷமான, அன்பில் செப்பேடு மாயமானது குறித்து துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் என்ற ஊரில், 1,200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் அனிருத்த பிரம்மராயர்; வைணவ பக்தர். இவர், ராஜராஜசோழனின் தந்தையான சுந்தரச்சோழனிடம் அமைச்சராக இருந்தார்.
அனிருத்த பிரம்மராயரின் நிர்வாக திறமைக்கு அங்கீகாரமாக, அவருக்கு பிரமாதிராசன் என்ற பட்டத்தை, சுந்தரச்சோழன் வழங்கினார்.
மயிலாடுதுறை அருகே கருணாகரமங்கலம் என்ற பெயரில், 10 வேலி நிலத்தையும் தானமாக வழங்கினார். அதை மாதவபட்டன் வாயிலாக, 11 செப்பேடு களில் எழுதியும் ஒப்படைத்தார். அதற்கு அன்பில் செப்பேடு என்று பெயர்.
தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட இச்செப்பேடு, அன்பில் சத்திய வாஹீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டு இருந்தது.
இதை, 1957ல், கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வந்த தொல்லியல் துறை குழுவினர் பார்வையிட்டு, படம் எடுத்து சென்றனர்.
தற்போது, அந்த கோவிலில் செப்பேடு இல்லை. எங்கு உள்ளது என்ற தகவலும் தொல்லியல் துறையிடம் இல்லை. அன்பில் செப்பேடு மாயமானது குறித்து, தமிழக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
'செப்பேடு குறித்து தகவல் தெரிந்தோர், அதை வைத்திருப்போர், எங்களை அணுகினால் தக்க சான்மானம் வழங்கப்படும்' என்று, மே மாதம் அறிவித்தனர். எனினும், செப்பேடு குறித்து துப்பு துலக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், 'செப்பேடு குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. மைசூருக்கு சென்றும் விசாரிக்க உள்ளோம்' என்றனர்.

