பணிகள் நடக்காத 1050 கட்டுமான திட்டங்கள் நிலை என்ன: மத்திய அரசு விசாரணை
பணிகள் நடக்காத 1050 கட்டுமான திட்டங்கள் நிலை என்ன: மத்திய அரசு விசாரணை
ADDED : ஏப் 26, 2024 03:08 AM

சென்னை: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, பதிவு செய்யப்பட்டு பணிகள் எதுவும் நடக்காத, 1,050 கட்டுமான திட்டங்களின் நிலை என்ன, அதற்கான பின்னணி காரணம் குறித்த விசாரணையை மத்திய அரசு முடுக்கிவிட்டு உள்ளது.
வீடு, மனை விற்பனையில் பிரச்னைகளை தீர்க்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், 2016ல் அமலுக்கு வந்தது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், தீர்ப்பாயம் போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன.
உயர்நிலை குழு
இந்த ஆணையங்கள், தீர்ப்பாயங்கள் தொடர்பாக, ரியல் எஸ்டேட் சட்ட விதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு உள்ளதா என, மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் உயர்நிலை குழுவைஅமைத்துள்ளது.
இக்குழுவினர் அனைத்து ஆணையங்கள், தீர்ப்பாயங்களின் செயல்பாடுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆய்வு செய்கின்றனர்.
இந்த வகையில், சமீபத்தில் நடந்த இக்குழுவின் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதில், பல்வேறு மாநிலங்களின் அதிகாரிகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அமைப்பு பிரதிநிதிகள், வீட்டுவசதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆய்வு
இதில், 2017க்குமுன், 7,000 திட்டங்கள் ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யப்பட்டன. இதில், 4,000 திட்டங்களில் பணிகள் முறையாக முடிக்கப்பட்டுள்ளன.
பணிகள் முடியாத, 3,000 திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ததில், 1,050 திட்டங்களில் எவ்வித கட்டுமான பணிகளும் நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இத்திட்டங்களில், முதலீடு செய்த வகையில் நடந்த பண பரிமாற்றங்களின் பின்னணி குறித்து, விசாரிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக, இந்த கூட்டத்தில்வலியுறுத்தப்பட்டது.
இக்குழு கூட்ட பரிந்துரை அடிப்படையில், இதில் எந்த முறையில், எந்த அமைப்பு வாயிலாக விசாரணை மேற்கொள்வது என்பது குறித்து மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

