ADDED : ஏப் 16, 2024 10:14 PM
சென்னை:'புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், மூன்று மாதங்களில் புலன் விசாரணை முடிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அன்னவாசல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில், ஆதிதிராவிட சமூகத்தினர் வசிக்கும் பகுதியில், கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியில், மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ், வெள்ளனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது.
கண்துடைப்பாக விசாரணை உள்ளதாகவும், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரியும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்கமல் என்பவர், உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணனை நியமித்து உத்தரவிட்டது.
இவ்வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தலைமையிலான அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையத்தின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி.,யின் விசாரணை நிலை குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
அதை பரிசீலித்த முதல் பெஞ்ச், புலன் விசாரணையில் உள்ள முன்னேற்றம் குறித்து, அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, வழக்கு, முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தீவிரம் காட்டாததால், லோக்சபா தேர்தலை கிராம மக்கள் புறக்கணிக்க உள்ளதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 'வழக்குப் பதிவு செய்து 15 மாதங்கள் ஆகிவிட்டன. புலன் விசாரணை எப்போது முடிக்கப்படும்' என, முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது.
அதற்கு, 'மூன்று மாதங்களில் விசாரணை முடிக்கப்படும்' என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, புலன் விசாரணையை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தி, விசாரணையை, ஜூலை 3க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

