அரிசி மூட்டை 25 கிலோவுக்கு கீழ் இருந்தாலும் ஜி.எஸ்.டி., கூடாது வியாபாரிகள் கோரிக்கை
அரிசி மூட்டை 25 கிலோவுக்கு கீழ் இருந்தாலும் ஜி.எஸ்.டி., கூடாது வியாபாரிகள் கோரிக்கை
ADDED : ஜூன் 19, 2024 01:28 AM
சென்னை:'அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் எத்தனை கிலோ பையாக இருந்தாலும், ஜி.எஸ்.டி., விதிக்கக்கூடாது' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, உணவுப்பொருள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் வேல்சங்கர், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாஷம் ஆகியோர் கூறியதாவது:
அரிசி, பருப்பு வகைகள், மாவு வகைகள், கோதுமை, வெல்லம், சிறுதானியங்கள் என, எந்த அத்தியாவசிய உணவு பொருளாக இருந்தாலும், 25 கிலோவுக்கு கீழ் உள்ள பையுக்கு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி உள்ளது. இதனால், மக்களும், வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
டில்லியில் வரும், 22ம் தேதி ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடக்கிறது.
அதனால், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், எத்தனை கிலோ பையாக இருந்தாலும் வரி விதிக்கக்கூடாது என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.
வறுத்த நிலக்கடலைக்கு, 12 சதவீதம் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
பூச்சிக்கொல்லி மருந்துக்கு, 12 சதவீதமாகவும்; நுண்ணுாட்ட உரங்களுக்கு, 18 சதவீதமாகவும் உள்ள ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
இதேபோல, பிஸ்கட், ரஸ்க், வெண்ணெய், உலர் பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு முன், வணிகர்கள் பங்கேற்கும் கூட்டம் நடத்தி, எங்கள் கோரிக்கைகளை ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

