ஆற்றில் குளிக்கும் யானைகளை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
ஆற்றில் குளிக்கும் யானைகளை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
ADDED : ஏப் 14, 2024 11:15 PM

மூணாறு : கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காட்டு யானைகளால் உள்ளூர் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் அவற்றைக் காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் படையெடுக்கின்றனர்.
இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, சின்னக்கானல், பூப்பாறை, சாந்தாம்பாறை உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க காட்டு யானைகளை காண தினமும் சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகஅளவில் வருகின்றனர்.
மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சியில் இயற்கையான சுற்றுச்சூழலில் ஆனக்குளம் பகுதி உள்ளது. அங்குள்ள ஆற்றில் நீர் அருந்த காட்டு யானைகள் மாலையில் கூட்டமாக வந்து செல்லும்.
கோடை காலத்தில் ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட யானைகள் நீர் அருந்த வரும். அவை நீர் அருந்தி விட்டு குளியலிடும். அப்போது குட்டி யானைகள் செய்யும் குறும்பு கண் கொள்ளா காட்சியாக அமையும். அந்த அழகையும், யானைகள் கூட்டத்தையும் கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் நாள் முழுவதும் ஆற்றின் கரையோரம் காத்திருப்பர். தற்போது தினமும் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் நீர் அருந்த வருகின்றன. அவற்றை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.

