கச்சத்தீவு மீட்பு அம்சம் இல்லை: பா.ஜ., கூட்டணி கட்சிகள் ஏமாற்றம்
கச்சத்தீவு மீட்பு அம்சம் இல்லை: பா.ஜ., கூட்டணி கட்சிகள் ஏமாற்றம்
ADDED : ஏப் 15, 2024 06:30 AM

சென்னை : கச்சத்தீவை மீட்பது குறித்த அம்சம், பா.ஜ., தேர்தல் அறிக்கையில் இடம் பெறாததால், அதன் கூட்டணி கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளன.
கருணாநிதி முதல்வராக இருந்த போது, கச்சத்தீவை இலங்கையிடம், மத்திய காங்கிரஸ் அரசு தாரை வார்த்தது. கச்சத்தீவு நம்மிடம் இல்லாததால், கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
கச்சத்தீவை மீட்டால், மீன்பிடி தொழில் களைகட்டும், நாட்டிற்கு அன்னிய செலாவணி அதிகம் கிடைக்கும், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். எனவே, கச்சத்தீவை மீட்க வேண்டும் என, நீண்ட காலமாக தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கச்சத்தீவை தி.மு.க., அரசு தாரை வார்த்தது குறித்த விபரத்தை, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பெற்று, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். பிரதமர் மோடி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும், இப்பிரச்னை குறித்து சமீபத்தில் காரசாரமாக கருத்துக்களை வெளியிட்டனர்.
இது, ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில், தி.மு.க.,விற்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், பா.ஜ., தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் நேற்று டில்லியில் வெளியிட்டனர். இதில், கச்சத்தீவு மீட்பு குறித்த அம்சம் இடம்பெறும் என, தமிழக பா.ஜ., கூட்டணி கட்சிகள் எதிர்பார்த்தன.
ஆனால், அதுபற்றிய தகவல் எதுவும் இடம் பெறவில்லை. அதேநேரத்தில், கடலோர உள்கட்டமைப்பு திட்டம் வாயிலாக தீவுகளை உலகளாவிய சுற்றுலா தலமாக மேம்படுத்துவோம் என்ற, வாக்குறுதி இடம்பெற்று உள்ளது. இதில், கச்சத்தீவும் நிச்சயம் இடம் பெறும்.
இறுதிகட்ட பிரசாரத்தில், பிரதமர் மோடி இதை அறிவிப்பார் என்ற நம்பிக்கையில் தமிழக பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உள்ளனர்.

