'சஸ்பெண்ட்' நடவடிக்கை கண் துடைப்பு நாடகம்; கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு அவசியம்
'சஸ்பெண்ட்' நடவடிக்கை கண் துடைப்பு நாடகம்; கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு அவசியம்
ADDED : ஜூன் 22, 2024 04:09 AM
கள்ளச்சாராய சம்பவங்கள் மீதான கண் துடைப்பு 'சஸ்பெண்ட்' நடவடிக்கையை கைவிட்டு, நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கடந்த 18ம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 50 பேர் இறந்துள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமாக உள்ளனர். தமிழகத்தில் பெறும் அதிர்ச்சியும், அரசுக்கு நெருக்கடியும் ஏற்படுத்தியுள்ள கள்ளச்சாராய பலி சம்பவத்தையடுத்து, கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷரவன்குமார் ஜடாவத் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். எஸ்.பி., சமய்சிங் மீனா, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., உள்ளிட்ட 9 பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் எக்கியர்குப்பத்தில் கடந்தாண்டு, மே 13ம் தேதி இதே போல் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்த 14 பேர் இறந்தனர். இச்சம்பவத்தில் விழுப்புரம் எஸ்.பி., ஸ்ரீநாதா, மதுவிலக்கு டி.எஸ்.பி., பழனி மற்றும் மரக்காணம் போலீசார் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கள்ளச்சாராய பலி சம்பவத்தின் போது, அரசுக்கு ஏற்படும் நெருக்கடியை தவிர்க்க, அதனை தடுக்க தவறியதாக போலீசார் மீது உடனடியாக சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்து வருகிறது.
கள்ளச்சாராயத்தை தடுப்பதில் வருவாய், கலால் துறையினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு பங்கிருந்தபோதிலும், போலீசார் மீது மட்டும் தடாலடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையும், கண்துடைப்பே என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
மரக்காணத்தில் கடந்தாண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி., ஸ்ரீநாதா, அடுத்த சில மாதங்களில் மீண்டும் பணியில் சேர்ந்தார். அவர், தற்போது சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., அலுவலக எஸ்.பி.,யாக உள்ளார்.
டி.எஸ்.பி., பழனி, கடலுார் மாவட்டம் பண்ருட்டி உட்கோட்டத்தில் பணியமர்த்தப்பட்டார். இன்ஸ்பெக்டர்கள் அருள்வடிவழகன் திட்டக்குடி, மரியாசோபி மஞ்சுளா கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்திலும் பணியில் சேர்ந்தனர். சப் இன்ஸ்பெக்டர்கள் சிவகுருநாதன் விழுப்புரம் டவுன், ஸ்ரீபன் காணை, சீனுவாசன் பெரியதச்சூர், ஏட்டுகள் ரவி, மகாலிங்கம் பிரம்மதேசம் போலீஸ் ஸ்டேஷனில் பணியில் சேர்ந்தனர்.
இதனால், போலீசார் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை, கண்துடைப்பு நாடகம் என்பது தெளிவாகிறது.
அதேபோல்தான், கள்ளக்குறிச்சியில் அண்மை காலத்தில் பொறுப்பேற்ற எஸ்.பி., சமய்சிங் மீனா மற்றும் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், கடந்த லோக்சபா தேர்தலின்போது இடம் மாற்றம் செய்யப்பட்டு 3 மாதங்கள்தான் ஆகிறது. கள்ளச்சாராயத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் மீது மட்டும் பழி சுமத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் தாக்கம் குறைந்த ஓரிரு மாதங்களில் மீண்டும் அவர்கள் பணியில் சேர்ந்து வழக்கமாக பணியை தொடங்கி விடுவர்.
உண்மையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில், கள்ளச்சாராய வியாபாரிகள் மீது போலீசார் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும்.
மேலும், தொடர் கள்ளச்சாராயம் விற்பவர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகளுக்கு பிறகும் சாராய விற்பனை தொடர்ந்தால், போலீசார் மீதான நடவடிக்கை கடுமையாக்குவதே நிரந்தர தீர்வாகும்.
-நமது நிருபர்-

