விசாரணையை தாமதப்படுத்துவதே நோக்கம் செந்தில் பாலாஜி வழக்கில் ஈ.டி., பதில் மனு
விசாரணையை தாமதப்படுத்துவதே நோக்கம் செந்தில் பாலாஜி வழக்கில் ஈ.டி., பதில் மனு
ADDED : ஏப் 26, 2024 01:14 AM
சென்னை,:வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை நிராகரிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் அளித்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக, பணம் பெற்று மோசடி செய்ததாக, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழும் செந்தில் பாலாஜிக்கு எதிராக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதில், கடந்த ஆண்டு ஜூனில் கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்கும்படி, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில், சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணை முடியும் வரை, சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரி, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ், பதில் மனுவைத் தாக்கல் செய்தார். இதையடுத்து, விசாரணையை, ஜூன் 21க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
அமலாக்கத் துறையின் பதில் மனு:
சட்டவிரோத பண பரிமாற்ற குற்றம் தனிப்பட்டது என்பதால், அதில் குறுக்கிட தேவையில்லை. மனுதாரரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்கும்படி, விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
எனவே, விசாரணை நீதிமன்றமும், அமலாக்கத் துறையும், தினசரி அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டிய கடமை உள்ளது.
மனு மேல் மனுவாக தாக்கல் செய்து, விசாரணையை மனுதாரர் தாமதப்படுத்துகிறார். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னும், விசாரணை நீதிமன்ற நடவடிக்கைக்கு, மனுதாரர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை; குற்றச்சாட்டு பதிவு செய்யவும், விசாரணை துவங்கவும் அனுமதிக்கவில்லை.
எங்களைப் பொறுத்தவரை, தாமதமின்றி விசாரணையை துவங்க தயாராக உள்ளோம். மாநில அரசில் மனுதாரருக்கு செல்வாக்கு உள்ளது.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கில், சட்டப்படியான நடவடிக்கையை எடுப்பது, மாநில அரசின் தனிப்பட்ட உரிமை; அரசின் கட்டுப்பாட்டில் குற்றப்பிரிவு போலீசார் உள்ளனர்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விட்டால், அது தனிப்பட்ட வேறு வழக்காகி விடுகிறது.
வழக்கு விசாரணையை நிறுத்தும் நோக்கில், இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். இது, சட்ட நடவடிக்கையை துஷ்பிரயோகம் செய்வதாகும். விசாரணை நடவடிக்கையை தாமதப்படுத்தும் நோக்கில் தாக்கல் செய்த இந்த மனுவை நிராகரிக்க வேண்டும்.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

