பாதிரியார் இல்லத்தில் கொலை வீரருக்கு கிடைத்தது முன்ஜாமின் உயர் நீதிமன்றம் உத்தரவு
பாதிரியார் இல்லத்தில் கொலை வீரருக்கு கிடைத்தது முன்ஜாமின் உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : மே 25, 2024 02:27 AM
மதுரை:கன்னியாகுமரி மாவட்டம், மைலோடு சர்ச் பாதிரியார் இல்லத்தில், ஜன., 20ல் பங்கு பேரவை தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சேவியர் குமார் அடித்து கொலை செய்யப்பட்டார்.
தி.மு.க., ஒன்றிய முன்னாள் செயலர் மற்றும் வழக்கறிஞர் ரமேஷ் பாபு, பாதிரியார் ராபின்சன் உட்பட 15 பேர் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிந்தனர்; சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மைலோடுவை சேர்ந்த சி.ஆர்.பி.எப்., வீரர் எட்வின் ஜோஸ், உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். அதை, நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு: சம்பவத்திற்கும் மனுதாரருக்கும் தொடர்பில்லை. மனுதாரர் சி.ஆர்.பி.எப்., வீரராக கோவையில் பணிபுரிகிறார். விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தார். அவரை வழக்கில் தவறாக போலீசார் சேர்த்துள்ளனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், 'வீரருக்கு முன்ஜாமின் அனுமதிக்கக்கூடாது' என விவாதம் நடந்தது.
நீதிபதி: மனுதாரருக்கு முன்ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை கோவை சிங்காநல்லுார் போலீசில் தினமும் காலை 10:30 மணிக்கு அவர் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.

