படுகருக்கு எஸ்.டி., அங்கீகாரம் கிடைக்க தி.மு.க., அரசு தடையாக உள்ளது
படுகருக்கு எஸ்.டி., அங்கீகாரம் கிடைக்க தி.மு.க., அரசு தடையாக உள்ளது
ADDED : ஏப் 15, 2024 06:23 AM

ஊட்டி : ''நீலகிரி படுகர் மக்களுக்கு பழங்குடியினருக்கான அங்கீகாரம் கிடைப்பதற்கு தி.மு.க., அரசு தடையாக உள்ளது,'' என, பா.ஜ., வேட்பாளர் முருகன் குற்றம் சாட்டினார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே நுந்தளா படுகர் கிராமத்தில், பா.ஜ., வேட்பாளர் முருகன் நேற்று பிசாரம் மேற்கொள்ள சென்றார். அவருக்கு, படுகர் பாரம்பரிய முறைப்படி, தலைபாகை கட்டி, போர்வை அணிவித்து நடனமாடி வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களுடன் முருகன் படுகர் நடனமாடி சென்றார்.
படுகர் 'ஹட்டி'யில் (கிராமம்) முதியோர், பெண்கள் அனைவரும் வெள்ளை போர்வை அணிந்து அமைர்ந்திருந்தனர். அவர்களிடம் முருகன் ஆசி பெற்றார். அதில், முதியோர் பலர் அவரின் தலையை பிடித்து, 'இம்முறை தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவாய்,' வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, கிராமத்தின் கோரிக்கைகளை கேட்ட முருகன், அனைத்தையும் தேர்தலுக்கு பின் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
அப்போது, படுகர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது குறித்து மக்கள் கேட்டனர்.
அப்போது பேசிய முருகன்,''மத்திய பழங்குடியினர் துறை படுகர் மக்களை பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. அதற்கான விபரங்களை மாநில அரசிடம் இருமுறை கேட்டுள்ளது. கடந்த ஆண்டு மீண்டும் நினைவூட்டலும் செய்தது. ஆனால், மாநில அரசு படுகர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
இதற்கு இங்குள்ள அமைச்சரும், எம்.பி.,யும் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் தான், பல ஆண்டுகளாக அந்த முயற்சி நிலுவையில் உள்ளது. படுகர் மக்களுக்கு பழங்குடியினருக்கான அங்கீகாரம் கிடைப்பதற்கு தி.மு.க., அரசு தடையாக உள்ளது.
இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்று வரும்போது, நிச்சயம் படுகர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுப்பேன்,'' என்றார்.
இதனை கேட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிராம தலைவர்கள் கூறுகையில்,'ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ள படுகர் மக்கள் அனைவரும் இம்முறை பா.ஜ.,வுக்கு ஓட்டுளிக்க முடிவு செய்து விட்டோம்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இதற்கான தகவல்கள் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. ஹிந்து தெய்வங்களை தரக்குறைவாக பேசும் வேட்பாளர்களுக்கு எங்கள் ஆதரவு இல்லை,' என்றனர்.

