சட்டம் - ஒழுங்கு பற்றி தி.மு.க., அரசுக்கு எந்த கவலையும் இல்லை * மத்திய இணை அமைச்சர் முருகன் குற்றச்சாட்டு
சட்டம் - ஒழுங்கு பற்றி தி.மு.க., அரசுக்கு எந்த கவலையும் இல்லை * மத்திய இணை அமைச்சர் முருகன் குற்றச்சாட்டு
ADDED : செப் 10, 2024 07:55 PM

கோவை:கோவை மாவட்டம், ஆவாரம்பாளையம் பகுதியில், ஆத்ம ரக் ஷா அறக்கட்டளை சார்பில், மத்திய அரசின் மக்கள் மருந்தகம் மற்றும் பிசியோதெரபி மையம் திறப்பு விழா நடந்தது.
மத்திய இணை அமைச்சர் முருகன் திறந்து வைத்த பின், நிருபர்களிடம் கூறியதாவது:
மலிவு விலை மருந்துகள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக, இந்த மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் விலையை விட, ஐந்து மடங்கு குறைவான விலைக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன. இந்தியா முழுதும் ஏழை, எளிய மக்களுக்கு இது பயனுள்ள திட்டமாக செயல்படுத்தபடுகின்றது.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். பி.எம்.ஸ்ரீ பள்ளிக்கு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்தது. அதை நடைமுறைபடுத்த வேண்டும் என்று, மத்திய அமைச்சர் கடிதம் எழுதினால், பதில் இல்லை. எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்கவில்லை.
புதிய தேசிய கல்வி கொள்கை, அனைத்து மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. தாய் மொழி கல்வியை வலியுறுத்துவது தான், தேசிய கல்வி கொள்கை. புதிய கல்வி கொள்கையில் தொழில்நுட்ப கல்வியும் கொண்டு வரப்பட வேண்டும் என்று தான், மத்திய அரசு விரும்புகிறது.
தமிழகத்தின் சட்டம் -- ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கின்றது. அது பற்றி கவலை இல்லாமல், தி.மு.க., ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். மது, கஞ்சா விற்பனை, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு என இருக்கின்றது.
செய்திகள் ஆதாரபூர்வமானதாக இருக்க வேண்டும். சமூக அக்கறை, சமூக உணர்வுடன் இருக்க வேண்டும். ஒரு தகவலை சொல்லும் போது, அந்த தகவலின் உண்மை தன்மையறிந்து சொல்ல வேண்டும்.
இதை கவனத்தில் கொண்டு, புதிய 'பிராட்காஸ்டிங் பாலிசி' பில் வர இருக்கிறது. இதற்காக பொதுமக்கள் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. தேசத்திற்கு எதிரான கருத்துகளை சொல்லும், 69 யூடியூப் சேனல்களை முடக்கி இருக்கிறோம்.
ராணுவத்திற்கு எதிரான கருத்துக்களை சொல்வது, சட்டம் ஒழுங்கு சீர்படும் வகையில் கருத்துகளை வெளியிடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவை இந்த சேனல்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

