ADDED : ஏப் 15, 2024 01:16 AM
சிவகாசி: விருதுநகர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து, அவரது சகோதரர் சண்முக பாண்டியன், சிவகாசி தேவர் சிலை அருகே, நேற்று காலை 10:30 மணியளவில் பிரசாரம் செய்ய இருந்தார்.
இதற்காக அக்கட்சியினர் பெண்களை திரட்டி இருந்தனர். அவர்கள் கட்சிக் கொடியுடன் காத்திருந்தனர். இதற்கிடையே, சண்முக பாண்டியன் வருவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன்னால் அதே சாலையில், நா.த.க., வேட்பாளர் கவுசிக் பாண்டியன் வாகனத்தில் வந்தார்.
சண்முக பாண்டியன் வாகனம் தான் வருகிறது என நினைத்த பெண்கள், தே.மு.தி.க., கட்சி கொடியுடன் சாலைக்கு வந்தனர்.
கட்சி நிர்வாகிகள் அது வேறு வாகனம் என்று கூறியவுடன் பெண்கள் ஓரத்தில் அமர்ந்தனர். இதனை கண்ட கவுசிக் பாண்டியன் உற்சாகமடைந்து, 10 மீட்டர் தாண்டி தன் வாகனத்தை நிறுத்தி, அந்த பெண்களிடம் பிரசாரம் மேற்கொண்டார்.
நா.த., கட்சியினர் துண்டு பிரசுரங்களை தே.மு.தி.க., கூட்டத்திற்கு வந்தவர்களிடம் கொடுத்தனர். அவர்களும் மறுக்காமல் பெற்றுக் கொண்டனர். காசு செலவில்லாமல் கூட்டத்தை கூட்டி பிரசாரம் செய்கிறார் என, அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.

