மயிலை சாவடியில் மறு ஓட்டுப்பதிவு நடத்த தமிழிசை வலியுறுத்தல்
மயிலை சாவடியில் மறு ஓட்டுப்பதிவு நடத்த தமிழிசை வலியுறுத்தல்
ADDED : ஏப் 20, 2024 10:38 PM
சென்னை:''மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில் உள்ள, 13வது ஓட்டு சாவடியில் மறு ஓட்டு பதிவு நடத்த வேண்டும்,'' என, தென் சென்னை லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் தமிழிசை கூறினார்
இது குறித்து, தமிழிசை கூறியதாவது:
தேர்தல் நேர்மையாக நடைபெற்று, நேர்மையாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பது ஜனநாயக நடைமுறை.
தி.மு.க.,வுக்கு தோல்வி பயம் எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் மாற்று பாதையை கடைப்பிடிப்பது வழக்கம்.
அதேபோல், மயிலாப்பூர் சட்டசபை தொகுதி, 13வது ஓட்டு சாவடிக்குள் புகுந்த தி.மு.க.,வினர், அதிகாரிகளை அடித்து, உதைத்து, கள்ள ஓட்டு போட முயற்சி செய்துள்ளனர். பின் போலீசாரால் தடுக்கப்பட்டனர்.
இருந்தும் ஓட்டு சாவடிக்குள் குளறுபடி நடந்துள்ளது. இதனால், மறு ஓட்டு பதிவு நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
இதேபோல், சோழிங்கநல்லுாரிலும் நடைபெற்றுள்ளது. அதை. பா.ஜ.,வினர் தடுத்துஉள்ளனர். பல இடங்களில், வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளன.
தி.நகர் சட்டசபை தொகுதியில் உள்ள, 199, 200, 201 ஆகிய ஓட்டு சாவடிகளில், 1,000க்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுஉள்ளன.
இதில், தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும். வெள்ளிக்கிழமை ஓட்டு பதிவு தேதி அறிவித்து, தொடர்ந்து இரண்டு நாள் விடுமுறை என்பதால் ஓட்டுப்பதிவு குறைந்துஉள்ளது.
நுாறு சதவீத ஓட்டு பதிவுக்காக, அதிக தொகை செலவு செய்தும் பயன் அளிக்கவில்லை. இது, சென்னை போன்ற நகரங்கள் உள்ள ஓட்டு பதிவில் இருந்தே தெரிகிறது. ஓட்டு சதவீதம் உயர, மக்களிடம் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.

