மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு; 'நிடி ஆயோக்' கூட்டத்தை தவிர்க்கும் ஸ்டாலின்
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு; 'நிடி ஆயோக்' கூட்டத்தை தவிர்க்கும் ஸ்டாலின்
ADDED : ஜூலை 24, 2024 06:44 AM

சென்னை : ''மத்திய பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில், 'நிடி ஆயோக்' கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட், மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. மூன்றாவது முறையாக ஓட்டளித்த மக்களுக்கு, பா.ஜ., கூட்டணி அரசு எந்த நன்மையும் செய்யத் தயாராக இல்லை என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.
ஒப்புதல் வேண்டும்
பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அறிவிக்க வேண்டிய திட்டங்கள் குறித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தேன். மூன்று ஆண்டுகளாக அறிவிக்கப்படாமல் உள்ள, சென்னை - மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் ஏற்கனவே அறிவித்துள்ள ரயில்வே திட்டங்களை விரைவாக செயல்படுத்த, நிதி ஒதுக்க வேண்டும். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பாலம் விரைவு சாலை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமெனக் கோரினேன். எதையும் நிதி அமைச்சர் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.
மைனாரிட்டி பா.ஜ.,வை, மெஜாரிட்டி பா.ஜ.,வாக்கிய மாநில கட்சிகளை திருப்திபடுத்தும் வகையில், சில மாநிலங்களுக்கு மட்டும், சில திட்டங்களை அறிவித்துள்ளனர். அதையும் நிறைவேற்றுவரா என்பது சந்தேகம்தான். தமிழக மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்து, நிதி ஒதுக்காமல் ஏமாற்றுவது போல, அந்த மாநிலங்களுக்கும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
தமிழகம் இரண்டு மிகப்பெரிய பேரிடர்களை சந்தித்துள்ளது. 37,000 கோடி ரூபாய் வரை இழப்பு கேட்டுள்ளோம். இதுவரை, 276 கோடி ரூபாய் தான் கொடுத்துள்ளனர். தமிழகத்திற்கான எந்த சிறப்பு திட்டமும், பட்ஜெட்டில் இல்லை. கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. புதிய ரயில்வே திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
அநீதியே உள்ளது
மத்திய பா.ஜ., அரசை தாங்கிப் பிடிக்கும் மாநிலங்கள் தவிர, மற்ற மாநிலங்களை நிதி அமைச்சர் மறந்து விட்டார். தமிழகம் என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை. மத்திய ஆட்சியாளர்கள் சிந்தனையிலும், செயலிலும் தமிழகம் இல்லை.
ஒரு நாட்டின் பட்ஜெட் என்பது, அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அந்த வகையில் பட்ஜெட்டில் நீதி இல்லை; அநீதியே உள்ளது.
ஓட்டளித்தவர்களுக்கு மட்டுமல்ல, ஓட்டளிக்காதவர்களுக்கும் நன்மை செய்வதுதான் சிறந்த அரசு. அப்படித்தான் தமிழக அரசின் செயல்பாடு உள்ளது. இதைப் பார்த்தாவது, மத்திய அரசு தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
வரும் 27 ம் தேதி பிரதமர் மோடி தலைமையில், நிடி ஆயோக் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், பங்கேற்க திட்டமிட்டிருந்தேன். ஆனால், பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், அந்த கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன்.
தமிழகத்தின் தேவைகள், உரிமைகளை நிலைநாட்ட, மக்கள் மன்றத்தில் தொடர்ந்து போராடுவோம். இன்று எம்.பி.,க்கள் டில்லியில் போராட்டம் நடத்த உள்ளனர். தமிழக மக்கள் மீது பா.ஜ.,வினர் ஆத்திரத்தில் உள்ளனர். மத்திய அரசு திட்டங்களை, இதுவரை எப்படிக் கையாண்டோமோ, அதேபோல கையாள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

