பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்
ADDED : மார் 28, 2024 12:05 AM
சென்னை:''தமிழகத்தில் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் உள்ளே மற்றும் வெளியே கண்காணிப்பு கேமரா பொருத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஏற்கனவே, 68,144 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. கூடுதலாக, 177 துணை ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பது தொடர்பான, வீடியோ மற்றும் புகைப்படங்களை, பொதுமக்கள், 'சி விஜில்' மொபைல் செயலி வழியே அனுப்பலாம். புகார் வந்த, 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தவிர, 1950 என்ற எண்ணுக்கும் புகார் அளிக்கலாம். அந்தந்த மாவட்ட எஸ்.டி.டி., குறியீட்டு எண்ணுடன், 1950 டயல் செய்தால், அந்த மாவட்ட கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம்.
கடந்த ஓராண்டில், 17.53 லட்சம் பேருக்கு புகைப்படத்துடன் கூடிய, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், சேர்க்கப்பட்ட, பெயர் திருத்தம் செய்த, 7.52 லட்சம் வாக்காளர்களில், 4.38 லட்சம் பேருக்கு புதிய அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 2.88 லட்சம் பேருக்கு, 10 நாட்களுக்குள் விரைவு தபாலில், வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
ஏப்., 1 முதல் 13ம் தேதிக்குள், ஓட்டுச்சாவடி அலுவலர் வழியே, பூத் சிலிப் வழங்கப்படும்.
மத்திய அரசு பணிகளில் உள்ள 7,851 பேர், மைக்ரோ பார்வையாளர்களாக ஓட்டுச்சாவடிகளில் நியமிக்கப்பட உள்ளனர். 'வெப் கேமரா' 45,000 ஓட்டுச்சாவடிகளில் பொருத்தப்படும்.
பதற்றமான ஓட்டுச்சாவடிகளின் உள்ளே மற்றும் வெளியே, கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். பணம் வினியோகத்தை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

