விபத்து வழக்கில் உத்தரவு நகல் விரைவாக கிடைக்காததால் அவதி
விபத்து வழக்கில் உத்தரவு நகல் விரைவாக கிடைக்காததால் அவதி
ADDED : ஏப் 11, 2024 09:18 PM
சென்னை:விபத்து வழக்குகளில், சான்றளிக்கப்பட்ட உத்தரவு, தீர்ப்பின் நகலை பெற, மூன்று மாதம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் தொடர்கிறது. இந்த தாமதத்தால், வழக்கறிஞர்கள், வழக்காடிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
வாகன விபத்தால் உயிர் இழப்பு, படுகாயம், நிரந்தர மற்றும் பகுதி ஊனம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறான விபத்துகளில் சிக்குபவர்கள், இழப்பீடு கோரி மோட்டார் வாகனங்கள் சட்டம் - 1988ன் கீழ், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்வர்.
இழப்பீடு கோர, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், இரண்டு சிறப்பு தீர்ப்பாயங்கள் உட்பட மொத்தம் எட்டு தீர்ப்பாயங்கள் உள்ளன.
இந்த தீர்ப்பாயங்களில், ஆண்டுக்கு 7,000 முதல் 8,000 வழக்குகள் வரை தாக்கலாகின்றன. இவற்றில், பைசல் செய்யப்படும் வழக்குகளின், 'சர்டிபைட் ஆர்டர் காப்பி' என்ற சான்று அளிக்கப்பட்ட உத்தரவு நகல், பல மாதங்களாகியும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் உரிய நேரத்தில் கிடைக்காததால், மேல்முறையீடு உட்பட வழக்கு சார்ந்த, அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ள முடியாமல், வழக்கறிஞர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுபற்றி விபத்து வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் கூறியதாவது:
விபத்து வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டதும், அதன் சான்றளிக்கப்பட்ட தீர்ப்பு உத்தரவு நகலை, 15 நாளில் வழங்க வேண்டும் என சட்ட விதிகள் உள்ளன.
ஆனால், தற்போது சான்றளிக்கப்பட்ட தீர்ப்பு நகலை பெற, மூன்று மாதம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த தாமதத்தால், மேல்முறையீடு, இழப்பீடு கோரல் போன்ற வழக்கு சார்ந்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள காத்திருக்க வேண்டி உள்ளது.
ஏற்கனவே, நிர்வாக குளறுபடிகள் காரணமாக, குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை தீர்வு கிடைப்பதில்லை. ஊழியர் பற்றாக்குறையால், சான்று அளிக்கப்பட்ட உத்தரவு நகல்கள் சரியான நேரத்தில் கிடைப்பதில்லை. விபத்து இழப்பீடு கோரும் தீர்ப்பாயங்களில், தற்போது அதிகளவில் இப்பிரச்னை நீடிக்கிறது.
இதன் காரணமாக, வழக்காடிகள், வழக்கறிஞர்கள் இடையே சுமுகமான உறவில் விரிசல் ஏற்படுகிறது. வழக்கில் நிவாரணம் என்னவென்று தெரிந்தும், அதை உரிய நேரத்தில் பெற முடிவதில்லை. இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

