கொள்ளுக்கும், எள்ளுக்கும் வித்தியாசம் தெரியாதவர் ஸ்டாலின்: பழனிசாமி
கொள்ளுக்கும், எள்ளுக்கும் வித்தியாசம் தெரியாதவர் ஸ்டாலின்: பழனிசாமி
ADDED : ஏப் 10, 2024 06:14 AM

தேனி: ''கொள்ளுக்கும், எள்ளுக்கும் வித்தியாசம் தெரியாதவர் ஸ்டாலின். என்னை பச்சைப்பொய் பழனிசாமி என்கிறார்.ஸ்டாலின் தான் பச்சைப்பொய் பேசுகிறார்,'' என, தேனியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.
தேனி பங்களாமேட்டில் அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து அவர் பேசியதாவது:
இத்தொகுதி தி.மு.க., - அ.ம.மு.க., வேட்பாளர்கள், அ.தி.மு.க.,வில் இருந்து சென்றவர்கள். இரட்டை இலைக்கு துரோகம் செய்தவர்களுக்கு தொண்டர்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.
சுயநலம், அதிகாரம்,பதவிக்காக கட்சி மாறி சென்றவர்களுக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உங்கள் வாயிலாக தண்டனை வழங்குவர்.
பா.ஜ., நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி என, தினகரன் பேசினார். தற்போது பச்சோந்தி போல் அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். பெரியாறு அணை நீர் மட்டத்தை முதல்வராக இருந்த ஜெயலலிதா, 136 அடியில் இருந்து, 142 அடியாக உயர்த்தினார்.
உச்ச நீதிமன்றம் அணையை பலப்படுத்தி, 142 அடியை 152 அடியாக உயர்த்த உத்தரவிட்டது. அதற்கான பணியை நாங்கள் துவக்கினோம்.
கேரள அரசு வழக்கு தொடர்ந்தது. அணையின் நீர்மட்டத்தை, 152 அடியாக உயர்த்த தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கிற்கு ஜெயலலிதா மணிமண்டபம் கட்டினார்.
'இந்தியாவை காக்க ஸ்டாலின் வருகிறார்' என கூறுவது வேடிக்கையாக உள்ளது. 'இண்டியா' கூட்டணியை ஏற்படுத்தி, மக்களை ஏமாற்றி மத்தியில் ஆட்சி அமைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்கிறார்.
அ.தி.மு.க., ஆட்சியில் பசுமை வீடு கொடுத்தோம். அதை நிறுத்தி விட்டனர். மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 400 சதுரடியில் வீடு கட்டி கொடுக்கப்படும்.
தமிழகத்தில் விவசாயி, விவசாய தொழிலாளர்கள், 65 சதவீதம் பேர் உள்ளனர். அ.தி.மு.க., அரசு பயிர்க்கடன் தள்ளுபடி செய்தது. விவசாய உப தொழில்கள் செய்ய பசுமாடுகள், ஆடுகள், கோழிகள் வழங்கினோம்.
விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம், மின் மோட்டார் வாங்க மானியம் வழங்கினோம். ஆனால், விவசாயிகளுக்கான இத்திட்டத்தை தி.மு.க., அரசு நிறுத்தி விட்டது.
விவசாயிகள் பற்றி பேசாத ஒரே முதல்வர் ஸ்டாலின் தான். அனைத்து உணவுப் பொருட்களும், 40 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. அரிசி கிலோவிற்கு, 15 ரூபாய் உயர்ந்து உள்ளது.
கொள்ளுக்கும், எள்ளுக்கும் வித்தியாசம் தெரியாதவர் ஸ்டாலின். என்னை பச்சைப்பொய் பழனிசாமி என்கிறார். ஸ்டாலின் தான் பச்சைப்பொய் பேசுகிறார்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விற்பனை, சட்ட - ஒழுங்கு சீர்கேடு, மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. திறமையற்ற அரசு நடக்கிறது.
தி.மு.க., கூட்டணியினர் 38 பேர் எம்.பி.,யாக உள்ளனர். இவர்கள் என்ன திட்டத்தை கொண்டு வந்தனர். அதே சமயம் காவிரி நீர் பிரச்னையில் அ.தி.மு.க.,வினர் லோக்சபாவை முடக்கினர். தமிழக மக்களுக்கு தீங்கு என்றால் எதிர்ப்போம்.
எனக்குப் பின், அ.தி.மு.க.,விற்கு யார் வேண்டுமானலும் பொதுச்செயலர்ஆகலாம். இக்கட்சி தொண்டர்களுக்கானது. தி.மு.க.,வைப்போல் வாரிசு அரசியல் செய்யும் கட்சி அல்ல.
தேனி மாவட்டத்திற்கு அ.தி.மு.க., ஆட்சியில் பல்வேறு கல்லுாரிகளை கொண்டு வந்தோம். ஆனால், ஸ்டாலின் என்ன திட்டம் கொண்டு வந்தார். எங்களை அவதுாறாக பேசுவதை விட்டுவிட்டு இதுவரை என்ன செய்தோம்; இனி என்ன செய்யப்போகிறோம் என, அவர் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

