போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த ஸ்டாலின் உத்தரவு
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த ஸ்டாலின் உத்தரவு
ADDED : மே 17, 2024 01:45 AM
சென்னை:'போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். போதைப்பொருள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் நடக்கும் பல்வேறு சட்டம் -- ஒழுங்கு பிரச்னைக்கு, போதைப்பொருட்களே காரணமாக உள்ளன.
இதனால், இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது. எனவே, போதைப்பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க, அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், போதைப்பொருட்களை ஒழிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், கடந்த 11ம் தேதி தலைமை செயலகத்தில், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், தலைமை செயலர், டி.ஜி.பி., சங்கர் ஜிவால், உள்துறை செயலர் அமுதா மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஏற்கனவே போலீசாருக்கு, முதல்வர் பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருந்தார். போதைப்பொருட்களை முற்றிலும் ஒழித்திட, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள், கல்லுாரிகள் அருகே, பெட்டிக் கடைகளில் போதைப் பொருட்களை விற்போர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவ - மாணவியர் இடையே, போதைப்பொருட்களால் ஏற்படும் கேடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் புழங்கும் பகுதிகள் கண்டறியப்படும் நிகழ்வுகளில், சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், எவ்விதமான சமரசமும் ஏற்கத்தக்கதல்ல.
எங்கள் மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டம் இல்லை என, ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி.,யும் உறுதி எடுத்து தடுத்து காட்ட வேண்டும். இது, உங்கள் கடமை என முதல்வர் அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விபரங்களை, முதல்வர் நேற்றைய கூட்டத்தில் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், 'அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.
'போதைப்பொருட்கள் விற்பனை செய்வோர் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுங்கள். போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், கூட்டத்தில் முதல்வர் பேசிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அரசு தரப்பில் வெளியிடப்படவில்லை.

