1000 வீடுகளில் சூரிய மின் நிலையம்; விண்ணப்பிக்கும் முறை எளிதாகுமா
1000 வீடுகளில் சூரிய மின் நிலையம்; விண்ணப்பிக்கும் முறை எளிதாகுமா
ADDED : மே 14, 2024 04:25 AM

சென்னை: தமிழகத்தில், மத்திய அரசின் சூரியசக்தி மின் திட்டத்தின் கீழ் இதுவரை, 1,025 வீடுகளில், 2,500 கிலோவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி, 'பி.எம்., சூரிய கர் முப்த் பிஜ்லி யோஜனா' எனப்படும், சூரிய வீடு இலவச மின் திட்டத்தை, இந்தாண்டு பிப்ரவரியில் துவக்கி வைத்தார். அத்திட்டத்தின் கீழ் நாடு முழுதும், ஒரு கோடி வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதனால், வீடுகளில் மின் கட்டண செலவு குறையும். மின் நிலையம் அமைக்க, 1 கிலோ வாட்டிற்கு, 30,000 ரூபாயும்; 2 கி.வாட்டிற்கு, 60,000 ரூபாயும் மானியம் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ வாட்டிற்கும், 18,000 ரூபாய் மானியம் தரப்படும்.
தமிழக மின் வாரியம், மின் தேவையை பூர்த்தி செய்ய தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்கிறது. இதனால், ஏற்படும் செலவை குறைக்க, மத்திய அரசு திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 25 லட்சம் வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதுவரை, 60,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதில், 1,021 வீடுகளில், 2,500 கி.வா., திறனில் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மானிய தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில், மத்திய அரசு நேரடியாக செலுத்துகிறது. சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்திற்கு சம்பந்தப்பட்ட மாநில மின் வாரியமும் ஒப்புதல் தர வேண்டும்.
எனவே, இணையதளத்தில் விண்ணப்பித்த உடன் இறுதியாக, மாநில மின் வாரியத்தின் பகுதிக்கு சென்று, அதில் கேட்கப்படும் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்; பலர் அதை செய்வதில்லை. இதனால், விண்ணப்பங்கள் பூர்த்தி அடையாமல் உள்ளன.
எனவே, விண்ணப்பம் செய்வதை எளிமையாக்குமாறு, திட்டத்தை ஒருங்கிணைக்கும், 'ரூரல் எலக்ட்ரிபிகேஷன்' நிறுவனத்திடம் வலியுறுத்தப்பட்டது.
மாநில மின் வாரியம் கேட்கும் விபரங்களை பதிவு செய்யவில்லை என்றாலும், அந்த விண்ணப்பங்களை வாரியம் ஏற்கும் வகையில் ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது. அதை பரிசீலிப்பதாக, ரூரல் எலக்ட்ரிபிகேஷன் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

