வெயில் தாக்கத்தால் வீடுகளுக்கு படையெடுக்கும் பாம்புகள்: பொதுமக்களுக்கு வனத்துறை 'அலெர்ட்'
வெயில் தாக்கத்தால் வீடுகளுக்கு படையெடுக்கும் பாம்புகள்: பொதுமக்களுக்கு வனத்துறை 'அலெர்ட்'
ADDED : ஏப் 29, 2024 06:09 AM

சென்னை : கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், காலி நிலங்கள், புதர்களில் இருந்து பாம்புகள் உள்ளிட்ட ஊர்வன வகை உயிரினங்கள் வீடுகளுக்குள் புகும் என்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என, வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வன உயிரின ஆர்வலர்
பொதுவாக மழைக் காலத்தில் தாழ்வான பகுதிகளில், வீடுகளை சுற்றியுள்ள காலி நிலத்தில் தண்ணீர் அதிகமாக தேங்கும்.
இவ்வாறு தொடர்ந்து சில மணி நேரங்கள், சில நாட்கள் தண்ணீர் தேங்கும் போது, நிலத்தில் துளையிட்டு வசித்து வரும் பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் வெளியேறும்.
அப்படி வெளியேறும் ஊர்வன வகை உயிரினங்கள் பாதுகாப்புக்காக, வீடுகளுக்குள் புகும் நிகழ்வுகள் நடக்கும். அதனால், மழை வெள்ள காலங்களில், வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்தால், அவற்றை பிடிக்க வனத்துறை மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் உதவுகின்றனர்.
இந்நிலையில், தற்போது தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது.
நிலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது வளைகளில் வாழும் பாம்புகள், எலி உள்ளிட்ட உயிரினங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகும். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, அவை வீடுகளுக்கு படையெடுக்கின்றன.
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில், தற்போது வீடுகள் மற்றும் பிற பயன்பாட்டு கட்டடங்களுக்கு பாம்புகள் வருவது அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நிலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது, அதை தாக்குபிடிக்க முடியாத நிலையில், ஊர்வன வகை உயிரினங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லும்.
அவசர அழைப்புகள்
இவ்வகையில் அவை வீடுகளுக்குள் புகுவது சமீபத்தில் அதிகரித்துள்ளது. வீட்டுக்குள் பாம்பு புகுந்தது குறித்த அவசர அழைப்புகள், கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளன.
வனத்துறை களப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் இதற்கான மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
↓தரைதள கட்டடத்தில் தாழ்வான பகுதிகளில், ஜன்னல்களை நீண்ட நேரம் திறந்து வைக்காதீர்கள்
↓மாலை நேரத்தில் வீட்டின் முன் மற்றும் பின்புறக் கதவுகளை அதிக நேரம் திறந்து வைக்காதீர்கள்
↓குளிர்ச்சியான நிழல் இருக்கும் மரத்தடி பகுதியில் ஓய்வு எடுப்பது, நிறுத்தி வைத்த வாகனங்களை எடுக்கும் முன், அதில் பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் ஏதாவது புகுந்துள்ளதா என்று பாருங்கள்
↓தரைதள வீடுகளில் பாய், கட்டில் ஆகியவற்றை பயன்படுத்தும் முன், அதில் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்
↓வீட்டின் முன் திறந்தவெளி பகுதியில், இரவு நேரங்களில் படுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
↓கொடிய விஷமுள்ள பாம்புகள் மாலை நேரங்களில் தான் வீடுகளுக்கு வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
↓வீட்டுக்குள் பாம்பு புகுந்தால், அதைக் கொல்வதில் பதற்றத்துடன் செயல்படாமல், உரிய நபர்களை அழைத்து பயன்படுத்துவது நல்லது
இவ்வாறு அவர் கூறினார்.

